இந்தியா அபார பந்துவீச்சு... பாகிஸ்தான் 127 ரன்கள் சேர்ப்பு

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்கள் எடுத்தார்.;

Update:2025-09-14 21:46 IST

Image Courtesy: @ACCMedia1 / @BCCI

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடந்து வரும் 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடர்ந்து பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாஹிப்சாதா பர்ஹான் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதில் முகமது ஹாரிஸ் 3 ரன், பக்கார் ஜமான் 17 ரன், சல்மான் ஆகா 3 ரன், ஹசன் நவாஸ் 5 ரன் எடுத்து அவுட் ஆகினர். சைம் அயூப், முகமது நவாஸ் இருவரும் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 128 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்