கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்


கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 17 Sep 2022 9:14 PM GMT (Updated: 2022-09-18T02:45:22+05:30)

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை

எடுத்த கொள்கை மாறாமல் லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் கும்ப ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனியும், தன-லாபாதிபதி குருவும் வக்ர இயக்கத்தில் இருக்கின்றனர். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். விட்டுக் கொடுத்துச் செல்வது, இட மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

கன்னி - புதன் சஞ்சாரம்

புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். பஞ்சம, அஷ்டமாதிபதியான புதன் உச்சம் பெறுவது நன்மைதான். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறுவதில் கவனம் செலுத்துவீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.

மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது புதிய பாதை புலப்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாகும். தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரலாம்.

இக்காலத்தில் மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். இதனால் விரயங்கள் கூடும். பயணங்கள் அதிகரிக்கும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, கூட்டாளிகளால் மனக்கலக்கம் ஏற்படும். ஆற்றல்மிக்கவர்கள் அருகில் இருந்தாலும், அவர்களின் உதவி கிடைக்காது. இடமாற்றம், ஊர்மாற்றம் உத்தியோக மாற்றம் போன்றவை எதிர்பாராத விதத்தில் வந்துசேரும்.

சனி வக்ர நிவர்த்தி

புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிநாதன் வக்ர நிவர்த்தியாவது ஒருவழிக்கு நன்மைதான் என்றாலும், அவர் விரயாதிபதியாக வலுவடைவதால் விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை அகல, அதிகமாக செலவழிப்பீர்கள். கல்யாணம், காதுகுத்துவிழா, ஆன்மிகச் சுற்றுலா போன்றவற்றிற்காகவும் செலவிடுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வேலை மாற்றம் உறுதியாகலாம். அது உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் வேலையாக அமையும்.

இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 18, 29, 30, அக்டோபர்: 2, 3, 9, 10, 14, 15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் விரயாதிபதி சனியும், தனாதிபதி குருவும் வக்ர இயக்கத்தில் இருப்பதால், செலவு கூடும். பாசம் காட்டியவர்கள் பகையாகலாம். கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டால் நன்மை வந்து சேரும். பிள்ளைகளுக்கு வேலையும், மண மாலையும் கிடைக்கும் யோகம் உண்டு. பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது.


Next Story