கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்


கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை

உயர்நிலையை அடைய கடுமையாக உழைக்கும் கும்ப ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. மேலும் செவ்வாய் சனியைப் பார்க்கிறார். எனவே மிகமிக கவனம் தேவைப்படும் நேரம் இது.

துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். தேங்கிய காரியங்கள் துரிதமாக நடக்கும். ஆயினும் விரயச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் சேமிக்க இயலாது. செலவுகள் அதிகரிக்கும். விரயங்களைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. என்றாலும் தன ஸ்தானாதிபதியும் வலுவிழந்திருப்பதால் நிம்மதி குறைவு ஏற்படும்.

துலாம் - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். 8-க்கு அதிபதி 9-ல் வரும் போது தொழிலில் சில இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இடமாற்றம், வீடு மாற்றங்களால் விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். முன்னோர் வழிச் சொத்துக்களால் முறையான பங்கீடுகள் கிடைக்கும். என்றாலும் அவை கைக்கு வந்து சேருவதில் தாமதம் உருவாகும். 'ஒரு மடங்கு வரவு வந்தால் இரு மடங்கு செலவு ஆகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். வாக்கு ஸ்தானாதிபதி வக்ர இயக்கத்தில் இருப்பதால், உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரிகளை உருவாக்கலாம். எனவே எதையும் யோசித்து பேசுவது நல்லது.

மிதுன - செவ்வாய் வக்ரம்

ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வக்ரம் பெறுவதோடு செவ்வாயின் பார்வையும் சனியின் மீது பதிவதால் மிகுந்த கவனம் தேவைப்படும். வீண் விரயங்களும், மனக்கசப்புகளும் அதிகரிக்கும். இக்காலத்தில் ஆன்மிகப் பயணங்களும், வழிபாடுகளும், அருளாளர்களின் ஆலோசனைகளும் கைகொடுக்கும். உத்தியோகத்தில் பிரச்சினை மேல் பிரச்சினை வந்து அலைமோதும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.

விருச்சிக - புதன் சஞ்சாரம்

ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம, அஷ்டமாதிபதியாக விளங்குபவர் புதன். அவர் பத்தாம் இடத்திற்கு வரும் போது நன்மையும், தீமையும் கலந்தே நடக்கும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படத்தான் செய்யும். இருப்பினும் அதைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது.

விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 10-ம் இடத்திற்கு வரும்பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஏழரைச் சனி நடப்பதால் சில நேரங்களில் வெற்றி கைநழுவியும் செல்லலாம். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வருகின்ற நேரம் இது.

குரு வக்ர நிவர்த்தி

உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருபகவான், மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். ஐப்பசி 30-ந் தேதி அவர் வக்ர நிவர்த்தியாகிறார். தன லாபாதிபதி வக்ர நிவர்த்தியாவதால் பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிக முயற்சி எடுத்தும் இதுவரை முடியாத காரியங்கள் இனி இனிதாக முடிவடையும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகலும். பங்குதாரர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

இம்மாதம் நரசிம்ம மூர்த்தி வழிபாடு நன்மை வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 25, 26, 30, 31, நவம்பர்: 5, 6, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் விரயச்சனி பலம்பெறுவதால் வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் குறுக்கீடுகளும் வரலாம். உடல்நலத்தில் தொல்லைகளும் வரலாம். மருத்துவச் செலவுகள் வந்து அலைமோதும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை குறையாமல் இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. மாதக் கடைசியில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.


Next Story