கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்


கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:46 PM GMT)

மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை

சேவை செய்வதைப் பெருமையாகக் கருதும் கும்ப ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் தன ஸ்தானத்தில் தானாதிபதி குரு பலம் பெற்றிருக்கிறார். இரண்டு கிரகங்களும் சமஅளவில் பலம் பெற்றிருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வர். தொழில்வளம் சிறப்பாக அமையும்.

புதன் வக்ர இயக்கம்

உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். 8-ம் இடத்திற்கு அதிபதியானவர் வக்ரம் பெறுவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். 5-க்கு அதிபதியாகவும் புதன் இருப்பதால் பூர்வீக சொத்துக்கள் விற்பனையாகலாம். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மகர - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது குடும்ப முன்னேற்றம் கருதி செலவிடும் சூழ்நிலை ஏற்படும். கல்யாண சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதிலும், குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதிலும் கவனம் செலுத்துவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிலும் கவனம் செலுத்துவீர்கள்.

புதன் வக்ர நிவர்த்தி

மார்கழி 24-ந் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக பஞ்சமாதிபதி பலம் பெறும்பொழுது நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறும். அஞ்சும்படியாக இருந்த பகைவர்கள் விலகுவர். ஆதரவுக்கரம் நீட்டு பவர்களின் எண்ணிக்கை உயரும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் இப்பொழுது மனம் மாறுவர். பொருளாதாரம் திருப்தியளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் அமைப்பு சிலருக்கு உண்டு.

செவ்வாய் வக்ர நிவர்த்தி

மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பலம் பெறும் இந்த நேரம் சகோதர ஒற்றுமை பலப்படும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். வருமானப் பற்றாக்குறை அகலும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். அரசுவழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிதாகச் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் செவ்வாய் இருப்பதால் புதிய தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும். பிள்ளைகளின் மேற்படிப்பு, வேலைவாய்ப்பை முன்னிட்டு எடுத்த முயற்சி கைகூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அரசு வழி உத்தியோகம் இப்பொழுது கிடைக்கலாம். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களின் பகை மாறும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்து பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் பெருமாள், லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 19, 20, 23, 24, 30, 31, ஜனவரி: 4, 5. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உடன்பிறப்புகள் உறு துணையாக இருப்பர். பிள்ளைகள் வழியில் சுபச்செலவு அதிகரிக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கெடுபிடியால் மனக்குழப்பம் உருவாகும். சனிக்கிழமை விரதமும், சனிபகவான் வழிபாடும் தடைகளை அகற்றும்.


Next Story