கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்


கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:47 PM GMT)

தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை

எதையும் யோசித்து முடிவெடுக்கும் மன நிலையைப் பெற்ற கும்ப ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, சூரியன் மற்றும் சுக்ரனுடன் சேர்க்கை பெற்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் விரயம் ஏற்படும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துவர். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். தன ஸ்தானத்தில் குரு இருப்பதால் அவ்வப்போது தேவைக்கேற்ற பணம் வந்து சேரும்.

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, ஏழரைச் சனியில் விரயச் சனியாகச் சஞ்சரிக்கிறார். அவரோடு சப்தமாதிபதி சூரியனும், 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரனும் இணைந்திருக்கின்றனர். எனவே குடும்பச் சுமை கூடும். உறவினர்களின் முன்னேற்றம் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். வாகனப் பழுதுகளால் வாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். 'இடமாற்றம், வீடுமாற்றம் செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள். தன ஸ்தானத்தில் வியாழன் சஞ்சரிக்கிறார். எனவே பணத் தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். 3-ம் இடத்தில் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் கேதுவுடன் சந்திரனும் சஞ்சரிக்கின்றார்கள். லாப ஸ்தானத்தில் புதனும், 4-ம் இடத்தில் செவ்வாயும் இருப்பதால் மாமன், மைத்துனர் வழியில் உதவிகள் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் ஏற்படும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

சூரியன் - சனி சேர்க்கை

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவரோடு சப்தமாதிபதி சூரியன் இணைந்துள்ளாா். பகைக் கிரகங்களின் இந்த சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். குடியிருக்கும் வீட்டால் சில பிரச்சினைகள் வரலாம். தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதியவர்களை சேர்த்துக் கொள்ளும் சூழல் உருவாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். பணிபுரியும் இடத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுங்கள். சகப் பணியாளர்களால் சில தொல்லைகள் வரலாம். இடமாற்றம் இனிமை தராது. புதிய பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

கும்ப - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தை 9-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் சுக்ரனால், யோகமான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும். பாக்கிய ஸ்தானாதிபதியாக சுக்ரன் இருப்பதால் பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரலாம்.

மகர - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். விரய ஸ்தானத்திற்கு புதன் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். சுபவிரயங்களாகவே அமையும். 8-க்கு அதிபதி 12-ல் சஞ்சரிக்கும் பொழுது, விபரீத ராஜயோகம் செயல்படும். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும் நேரம் இது.

இம்மாதம் வைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 16, 17, 20, 21, 26, 27, 31, பிப்ரவரி: 1, 2, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.


Next Story