கும்பம் - ஆண்டு பலன் - 2022
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை)
பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்
தனவரவு தாராளமாக வந்து சேரும்
கும்ப ராசி நேயர்களே!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கமாகத் தொடங்குகிறது. அதே நேரம் தன- லாபாதிபதியான குரு தன ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். தனாதிபதியும், விரயாதிபதியும் சம விகித பலத்துடன் சஞ்சரிப்பதால், செலவிற்கேற்ற வரவு வந்துசேரும். எந்தக் காரியமும் தொடங்கியவுடன் சிறப்பாகவே முடிவடைந்துவிடும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் ஆண்டு இது.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. என்றாலும் ஏழரைச்சனியின் ஆதிக்கத்தால் தடைகள் வரத்தான் செய்யும். இருப்பினும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
உங்கள் ராசியிலேயே செவ்வாய், சுக்ரன் இணைந்திருக்கிறார்கள். 3, 10-க்கு அதிபதியான செவ்வாயும், 4, 9-க்கு அதிபதியான சுக்ரனும் இணைந்திருப்பதால் உடன்பிறப்புகளுக்கும், வாழ்க்கைத் துணைக்கும் நல்ல வேலை அமையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பிறருக்கு ஜாமீன் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். உடன் பிறப்புகள் வாயிலாக வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சொத்து தொடர்பான குழப்பங்களுக்கு, நல்ல பதில் கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு சேர்க்கை பெற்றிருக்கின்றன. சூரியனும், புதனும் இணைந்திருப்பது நன்மைதான். என்றாலும் அவர்களோடு ராகுவும் சேர்ந்திருப்பதால் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகள் வரலாம். உடன்பிறப்புகளை கூட்டாக வைத்து செய்து வந்த தொழிலில், திடீர் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். 9-ல் கேது இருப்பதால் தந்தை வழி உறவில் விரிசல் ஏற்படலாம். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
வருடத் தொடக்கத்திலேயே சுக்ரனோடு செவ்வாய் இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும், குருவிற்கு 6-ம் இடத்தில் சந்திரன் அமர்ந்து 'சகட யோக'த்தையும் ஏற்படுத்துகிறார்கள். செவ்வாயை சந்திரன் பார்ப்பதால் 'சந்திர மங்கள யோக'மும் உருவாகிறது. அதோடு குரு மற்றும் சனி ஆகிய கிரகங்கள் தன் சொந்த வீட்டில் பலம் பெற்றிருக்கின்றன. இத்தனை யோகங்களோடு உங்கள் ராசி அமைந்தாலும், விரயச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும்.
குருவின் ஆதிக்கம் சிறப்பாக இருக்கிறது. தன - லாபாதிபதியான குரு, தன ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரப் பிரச்சினை ஏற்படாது. என்றாலும் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் விரயம் கூடத்தான் செய்யும். எனவே செய்யும் செலவுகளை, சுப விரயங்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.
குருவின் பார்வை பலன்
ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். மதிப்பும், மரியாதையும் உயரும். ஆரோக்கியத் தொல்லை அகலும். நல்ல உத்தியோக வாய்ப்புகள் கைகூடும். குருவின் பார்வை 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்புவதில் இருந்த தடை விலகும். தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் பங்கெடுத்துப் பணியாற்றும் துறையிலேயே புதிதாக தொழில் தொடங்க நினைப்பீர்கள். ஏழரைச்சனியின் ஆதிக் கம் நடப்பதால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரில் தொழிலைத் தொடங்கி, நீங்கள் நிர்வாகம் செய்யலாம். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
சனியின் வக்ரமும், பெயர்ச்சிக் காலமும்
25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். சனியின் வக்ர காலத்தில் மிகுந்த கவனம் தேவை. பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உறவினர் பகை, உத்தியோகத்தில் பிரச்சினை, பயணங்களில் தடை போன்றவை ஏற்படும். உறவினர்களுக்கு செய்யும் நன்மை கூட, சச்சரவையே உண்டாக்கும். பிள்ளைகளின் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். 29.3.2023-ல் கும்ப ராசிக்குச் சனி செல்கின்றார். அந்தப் பெயா்ச்சிக்குப் பின்னர், ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடி செய்ய இயலாது. மன அமைதி குறையும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்த ஆண்டு முழுவதும் நன்மை பெற, தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது நல்லது.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் விரயச் சனியன் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால், அதிகமான விரயங்களை சந்திக்க நேரிடும். அதே நேரம் தனாதிபதி குருவும் நன்றாக இருப்பதால் திடீர் வரவும் உண்டு. கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகளால் தொல்லைகள் தொடரலாம். நல்ல வாய்ப்புகள் சில கைநழுவிச் செல்லும். உங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டு இது.