மேஷம் - குருப்பெயர்ச்சி பலன்கள்


மேஷம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 21 April 2023 6:45 PM GMT (Updated: 21 April 2023 6:47 PM GMT)

22-04-2023 முதல் 01-05-2024 வரை

(அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

வந்தது ஜென்மத்தில் குருபகவான்; வழிபட்டோர்க்கு வளம் சேரும்!

மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும்மேஷ ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரித்து வந்த குரு பகவான் 22.4.2023 முதல் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகின்றார். விரயாதிபதியான குரு பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்கள், இட மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் வந்தாலும் அவை திருப்தி தரும் விதத்திலேயே அமையும். ஜென்ம குருவாக இருக்கிறாரே 'ஜென்ம ராமர் வனத்திலே' என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது என்பதால் அப்படி ஏதும் நடக்குமோ என்று நினைக்க வேண்டாம். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் பாதசார பலமறிந்து அதற்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொள்ளுங்கள், நல்லது நடக்கும்.

குரு இருக்கும் இடத்தின் பலன்

நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்குபவர் குரு பகவான். அவர் உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். பாக்கிய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவர், ஜென்மத்திற்கு வருவதால் விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். வீண் விரயங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.

ஜென்மத்தில் குருதான் வந்தால்

செலவுகள் அதிகரிக்கும்!

பொன் பொருள்கள் வாங்குவதும்

பூமிகளின் சேர்க்கைகளும்

மன்பதையில் மேற்கொண்டால்

மனமினிக்கும் வாழ்வமையும்!

வந்திணைந்த குருவை

வழிபட்டால் வளர்ச்சி வரும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் ஜென்மத்தில் குரு வரும் பொழுது நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க இயலாது. அதே நேரத்தில் செலவுகள் அதிகரிக்கின்றதே என்று கவலைப்படவும் வேண்டாம். செலவிற்கேற்ற விதத்தில் வரவு முன்னதாகவே வந்துவிடும். பூர்வீக சொத்துக்களை விற்று விட்டுப் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

வெற்றிகளை குவிக்கும் வியாழனின் பார்வை!

'குரு பார்க்க கோடி நன்மை' என்பது பழமொழி. அதன் அருட்பார்வையினால் அஷ்ட லட்சுமியும் இல்லத்தில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் புனிதமடைகின்றது. அது புத்திர ஸ்தானமாகவும் இருப்பதால் பிள்ளைகளுக்கான சுபகாரியங்கள் நடைபெறும். முன்னோர்கள் கட்டிவைத்த கோவில் திருப்பணிகளைத் தொடர்ந்து செய்ய முன்வருவீர்கள். தெய்வ பலம் உங்களை வழிநடத்திச் செல்லும்.

குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றது. மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வழிபிறக்கும். திருமணமானவர்களாக இருந்தால் வாழ்க்கைத் துணை வழியே நன்மை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வெளிநாட்டு முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் வந்த பிரச்சினை அகலும். மூத்த சகோதரர் வழியில் முன்னேற்றம் கிடைக்கும்.

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே பெரிய மனிதர் களின் நட்பு கிடைக்கும். கூட்டு முயற்சிகளிலிருந்து விலகி தனித்து இயங்கலாமா என்று யோசிப்பீர்கள். இதுவரை பாகப்பிரிவினைக்கு ஒத்துவராத உடன்பிறப்புகள் இப்பொழுது ஒத்துவருவர். பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வும், கேட்ட சலுகைகளும் கிடைக்கலாம். கண்ணியம் மிக்க நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்!

அசுவதி நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:குரு பகவான் ஜென்ம ராசியில் அசுவதி நட்சத்திரக் காலில் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். வீண் விரயங்களிலிருந்து விடுபட சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய தகவல் வந்து சேரலாம். பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். வெளியூர் தொடர்புகள் ஆதாயம் தருவதாக அமையும். தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

பரணி நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:குரு பகவான் பரணி நட்சத்திரக்காலில் சுக்ரன் சாரத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் யோகமான நேரம்தான். சுக்ரன் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் என்பதால் அதன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது குடும்ப முன்னேற்றம் கூடும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக முடிவடையும். பெண்களின் சுபச்சடங்குகள், கல்யாணம், காது குத்து போன்றவை நடைபெறும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். பிறருக்கு வாக்குறுதி கொடுக்கும் பொழுது கவனம் தேவை.

கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:

ஜென்ம ராசியில் கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வகையில் ஆதாயங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாக சூரியன் விளங்குவதால், பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் இப்பொழுது கிடைக்கும். நீண்டநாட்களாக தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு இப்பொழுது தீர்வு காண்பீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

ராகு - கேது பெயர்ச்சி!

மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகு வருகின்றார். கன்னி ராசிக்கு கேது செல்கின்றார். இதுவரை குருவுடன் ராகு இணைந்திருந்தது. இப்பொழுது ராகு விலகி விட்டதால் குரு கூடுதல் பலம் பெறுகின்றார். எனவே அவரது பார்வைக்கு பலன் அதிகம் கிடைக்கும். அதே நேரம் 12-ல் ராகு சஞ்சரிப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டில்இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம். கேதுவின் சஞ்சாரத்தில் ஆரோக்கியத் தொல்லைகள் அடிக்கடி வந்து அலைமோதும்.

குருவின் வக்ர காலம்! 12.9.2023 முதல் 20.12.2023 வரை

இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக் காலில் வக்ரம் பெறுகின்றார். எனவே குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் திட்டமிட்டுச் செய்வதோடு திறமை மிக்கவர்களை பக்கபலமாக வைத்துக்கொள்ளுங்கள். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. பயணங்கள் அதிகரிக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். நீண்ட நாளைய கனவு நனவாகும். சுயதொழில் செய்பவர்கள் வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் அமைப்பு வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் நட்பு பலப்படும். கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

குரு பகவானுக்குரிய சுலோகம்...

தேவனாம்ச ரிஷனாம்ச

குரும் காஞ்சன ஸந்திபம்!

புத்தி, பூதம் த்ரிலோகேஸம்

தம் நமாமி ப்ரஹஸ்பதிம்!

குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச்சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர் செல்வர்) படத்தின் முன்னால் வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. திருமணத் தம்பதியர் ஜோடி விளக்கு ஏற்றுவது நல்லது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி விரயங்களை அதிகரிக்கச் செய்யும். வீடு மாற்றங்களாலும், இட மாற்றங்களாலும் மன அமைதி குறையும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்திவைப்பீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரியங்களை காலா காலத்தில் முடிக்க வேண்டுமென்று அக்கறை செலுத்துவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். இருப்பினும் உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

இல்லத்துப் பூஜையறையில் விநாயகப் பெருமான் படம் வைத்து துதிப்பாடல் பாடி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு கவசம் பாடி குரு பகவானை வழிபட்டால் வளர்ச்சி கூடும். வருங்காலம் நலமாகும்.


Next Story