கடகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்


கடகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 21 April 2023 6:45 PM GMT (Updated: 21 April 2023 6:49 PM GMT)

22-04-2023 முதல் 01-05-2024 வரை

(புனர்பூசம், 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை)

(பெயரின் முதல் எழுத்துக்கள் : ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

பத்தில் வந்தது குருபகவான்! பதவியில் கவனம் இனித்தேவை!

திட்டம் போட்டுச் செயலாற்றுவதில் வல்லவர்களான கடக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 22.4.2023 அன்று உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கு சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் வீற்றிருந்து தன் பார்வையால் பல நன்மைகளை வழங்குவார். 'பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும்' என்பார்கள். வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமைய உங்கள் சுய ஜாதகத்தில் குருவின் பாதசார பலமறிந்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

குரு இருக்குமிடத்தின் பலன்!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் இப்பொழுது 10-ம் இடத்திற்கு வருகின்றார். எனவே பணிபுரியும் இடத்தில் பதற்றங்கள் கூடாது. எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பத்திலே குருவும் வந்தால்

பதவியில் மாற்றம் சேரும்!

முத்தான வாழ்வில் வந்த

முட்டுக் கட்டைகள் அகலும்!

கொத்தோடு விலகும் துன்பம்

கூடுதல் கவனம் வைத்தால்

தத்தளிக் கின்ற வாழ்வில்

தனத்தோடு புகழும் கூடும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

இது பொது நியதிதான் என்றாலும் பத்தில் குரு வரும் பொழுது மிகவும் கவனத்துடன் தான் செயல்பட வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் திடீர் திடீரென மாற்றம் வரலாம். ஆடம்பரச் செலவுகளால் கையிருப்புக் கரையும். அதிகார வர்க்கத்தினரின் பகையால் மனக்கிலேசங்கள் அதிகரிக்கும். தொழில் புரிபவர் களுக்கு பணியாளர்களால் தொல்லை உண்டு.

வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். அவர் உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகின்றார். குறிப்பாக உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். 2-ம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால் குடும்ப ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே குடும்பத்தில் இதுவரை கொடி கட்டிப் பறந்த பிரச்சினைகள் இனி படிப்படியாக மாறும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் வாகனம், சுகம், கல்வி, தாய் போன்றவற்றைக் குறிக்குமிடம் பலப்படுகின்றது. எனவே சந்தோஷங்களைச் சந்திக்கும் சூழ்நிலை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். தாய்வழியில் நன்மை கிடைக்கும். பயணங்கள் பலன் தரும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் இதுவரை இருந்த எதிர்ப்புகள் படிப்படியாகக் குறையும். இல்லத்தில் அமைதி நிலவ வழிபிறக்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும். தொழிலை மேம்படுத்த முதலீடு கிடைக்கும். இதுவரை ரண சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொன்ன மருத்துவர்கள், இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கி விடுவர்.

நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்!

அசுவதி நட்சத்திரக் காலில் குருபகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் அசுவதி நட்சத்திரக்காலில் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தேவையற்ற அலைச்சல்களும், இடையூறுகளும் வந்து சேரலாம். அதே நேரத்தில் அஷ்டமத்தில் சனி சஞ்சரிப்பதால், பொறுப்புகள் சொல்வதன் மூலம் புதிய பிரச்சினைகள் தலைதூக்கும். பணநெருக்கடியும் அதிகரிக்கும். பணியாளர்கள் உங்களை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் தொல்லை ஏற்படும். ஆற்றல் மிக்கவர்கள் அருகில் இருந்தாலும் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது.

பரணி நட்சத்திரக் காலில் குருபகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் பரணி நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். நிதானமாக எதையும் யோசித்துச் செய்வது நல்லது. இல்லத்தில் மனம் வருத்தப்படும் படியான செயல்பாடுகள் நடைபெறும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவரது சாரத்தில் பகை கிரகமான குரு பகவான் வரும்பொழுது நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். பிறருக்கு வாக்குறுதி கொடுத்தால் யோசித்துக் கொடுக்க வேண்டும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் எதிர்பாராத பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

கார்த்திகை நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குரு பகவான் கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத மாற்றங்கள் இல்லம் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். படித்து முடித்து வேலை இல்லாமல் இருந்த வாழ்க்கைத் துணைக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து ஆதரவுக் கரம் நீட்டுவர். வெளிமாநிலங்களுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு ஆச்சரியப்படத்தக்க பலன்கள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவும், புதிய பதவிகளும் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

ராகு-கேது பெயர்ச்சி!

மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கின்றனர். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். புதிய பாதை புலப்படும். பெற்றோர் வழியில் தொழில் வளர்ச்சிக்கு ஆதரவு கிடைக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். இதுவரை குருவுடன் ராகு சேர்ந்திருந்தது. இப்பொழுது ராகு விலகுவதால் குரு கூடுதல் பலம் பெறுகின்றார். எனவே அவரது பார்வைக்கு பலன் அதிகம் கிடைக்கும். கேது சகோதர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடன்பிறப்புகளின் ஒற்றுமை கொஞ்சம் குறையலாம். செய்த உதவிக்கு உறவினர்கள் நன்றி காட்டவில்லையே என்று வருத்தப்படுவீர்கள்.

குருவின் வக்ர காலம்! (12.9.2023 முதல் 20.12.2023 வரை)

இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக் காலில் வக்ரம் பெறுகின்றார். இதன் விளைவாக குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லும். மறைமுகப் பகை ஏற்படும். எனவே தொழில் முன்னேற்றத்தையோ, உத்தியோகம் சம்பந்தமானவற்றையோ யாரிடமும் முன்கூட்டியே சொல்ல வேண்டாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள் பொறுப்புகளில் இருந்து விடுபடும் சூழ்நிலை உண்டு. எதிர்பாராத விரயங்களால் மகிழ்ச்சி குறையும். உடல் நலத்தில் எவ்வளவு கவனமாக இருந்தாலும் நோய் வந்து மருத்துவச் செலவை உண்டாக்கும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். பாசம் மிக்க உறவினர்கள் உங்களை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இடமாற்றங்கள் இனிமை தருவதாக அமையும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருக்க ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும், தாய்-தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை. உடன்பிறப்புகளின் வழியே சுபகாரியம் முடிவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்மட்ட அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

இல்லத்து பூஜை அறையில் அபிராமி அம்மன் படம் வைத்து வழிபடுவது நல்லது. திங்கட்கிழமை தோறும் விரதமிருந்து அபிராமி அம்மன் பதிகம் பாடி வழிபட்டால் அனைத்து யோகங்களும் வந்து சேரும்.


Next Story
  • chat