கடகம் - தமிழ் மாத ஜோதிடம்


கடகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Aug 2022 12:42 PM GMT (Updated: 2022-08-16T18:14:14+05:30)

ஆவணி மாத ராசி பலன்கள் 17-08-2022 முதல் 17-09-2022 வரை

புகழ்பெற்ற மனிதர்களாக பூமியில் வாழ விரும்பும் கடக ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தன ஸ்தானத்தில் தனாதிபதி சூரியனும், விரயாதிபதி புதனும் இணைந்திருப்பதால் வரவும், செலவும் சமமாகும். குரு பார்வை இருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

சிம்ம - சூரியன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன், இந்த மாதம் முழுவதும் அதே இடத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே தன ஸ்தானம் வலுப்பெற்று, பணத் தேவை பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே நடத்தி வைப்பீர்கள். அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

கன்னி - புதன் சஞ்சாரம்

ஆவணி 8-ந் தேதி, கன்னி ராசிக்குச் செல்லும் புதன் அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியாகவும் புதன் விளங்குவதால், சில நன்மைகளும் நடைபெறும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

வக்ர புதன் சஞ்சாரம்

ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். இதன் விளைவாக 'புத ஆதித்ய யோகம்' செயல்படும். விரயாதிபதி புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் சகாய ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால் சில தடைகளும், தாமதங்களும் வந்துசேரும். ஒரு சிலருக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வரும் போது அசையாச் சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும்.

குரு வக்ரமும், சனி வக்ரமும்

மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் உள்ளனர். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். அதேசமயம் தந்தைவழி உறவில் விரிசல் வரலாம். பூர்வீக சொத்துப் பிரச்சினை நீடிக்கும். சனியின் வக்ர இயக்க காலத்தில், குடும்பம் ஒற்றுமையாக இருக்க விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். எதையும் திட்டவட்டமாகச் செய்ய இயலாது.

இந்த மாதம் சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டால் சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 19, 20, 27, 28, 31, செப்டம்பர்: 1, 12, 13, 16, 17மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் இருப்பதால், வரவும், செலவும் சமமாகவே இருக்கும். தனாதிபதி சூரியன் தன ஸ்தானத்திலேயே இருப்பதால் காரியங்கள் கைகூடும். கடைசி நேரத்தில் பணத்தேவை பூர்த்தியாகும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.


Next Story