கடகம் - தமிழ் மாத ஜோதிடம்


கடகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 18 Sept 2022 2:30 AM IST (Updated: 18 Sept 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை

வேகமும், விவேகமும் கொண்டு செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் விரய ஸ்தானத்திலும், விரயாதிபதி புதன் தன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.

கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் அவர், அங்கு நீச்சம் பெறுகிறார். இதனால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். பிரியமானவர் களுடன் இருந்த நட்பு பகையாகலாம். வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் தேவை. கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதாலும், சுக ஸ்தானத்தில் சுக்ரன் நீச்சம் பெறுவதாலும், குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்படும்.

கன்னி - புதன் சஞ்சாரம்

புரட்டாசி 16-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். அங்கு அவர் உச்சம் பெறுகிறார். மேலும் அங்குள்ள சூரியனுடன் புதன் இணைவதால் 'புத ஆதித்ய யோகம்' உருவாகிறது. எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வழக்குகள் சாதகமாகும். வருங்கால நலன் கருதி எடுத்த புது முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். அதிகார வர்க்கத்தினர் உறுதுணையாக இருப்பர். சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகள் வழியில் விரயம் ஏற்படலாம். மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் கடல்தாண்டிச் செல்லும் யோகம் தடைபடலாம். வாழ்க்கைத் துணையோடு போராட்டங்களும், வாங்கல்-கொடுக்கல்களில் பிரச்சினைகளும் ஏற்படும். இக்காலத்தில் தெய்வ வழிபாடு அவசியம் தேவை.

சனி வக்ர நிவர்த்தி

புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே கண்டகச் சனியின் ஆதிக்கம் கொஞ்சம் வலிமையடைகிறது. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அதனால் மனக்கலக்கம் அதிகரிக்கும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் பேசி முடித்திருந்தாலும் அது கைநழுவிப் போகலாம். ெவளிநாட்டு பயணத்தில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழியே பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களுக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகவே தெரியும். மிகமிக கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமிது.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 23, 24, 29, 30, அக்டோபர்: 9, 10, 13, 14.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு கூடும். கண்டகச் சனி ஆதிக்கம் இருப்பதால் எதையும் யோசித்து செய்வதுநல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. உடல்நலன் கருதி ஒரு தொகையைச் செலவிடும் சூழல் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத விதத்தில் இடமாற்றம் உருவாகலாம்.


Next Story