கடகம் - தமிழ் மாத ஜோதிடம்


கடகம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 17 Oct 2022 6:45 PM GMT (Updated: 2022-10-18T00:16:14+05:30)

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை

பிறரை பார்த்தவுடன் எடைபோடும் வல்லமை பெற்ற கடக ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவர் மீது குருவின் பார்வை பதிகிறது. எனவே பொருளாதார முன்னேற்றமும், புதிய திருப்பங்களும் ஏற்படும்.

துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

ஐப்பசி 2-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். அதிலும் தனாதிபதி சூரியனோடு சுக்ரன் இணைவதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதிற்கினிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. கண்டகச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

துலாம் - புதன் சஞ்சாரம்

ஐப்பசி 6-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது சுப விரயங்கள் அதிகரிக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து வெற்றிக்கொடி பிடிப்பீர்கள். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். புத ஆதித்ய யோகமும், புத சுக்ர யோகமும் இருப்பதால் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பழைய கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியாகும்.

மிதுன - செவ்வாய் வக்ரம்

மாதத் தொடக்கத்தில் மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அதோடு ஐப்பசி 18-ந் தேதி செவ்வாய் வக்ரமும் அடைகிறார். எனவே மருந்தளவிற்கு கூட மனநிம்மதி இருக்காது. வாழ்கைத் துணையோடு பிரச்சினை வரலாம். ஆதாயம் தரும் தகவல்கள் குறையும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். 'பணம் எவ்வளவு வந்தாலும் தங்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை. பணிபுரிபவர்கள் தங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும்.

விருச்சிக - புதன் சஞ்சாரம்

ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். குரு பார்வையும் பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.

விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

ஐப்பசி 26-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது நல்ல பலன்களை வழங்குவார். குறிப்பாக வீடு, இடம் வாங்கும் யோகம், உயர்ந்த மனிதர்களின் அரவணைப்பு, பிள்ளைகளின் திருமண முயற்சி போன்றவை கைகூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள், மின்சாதனங்கள் போன்றவற்றை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

குரு வக்ர நிவர்த்தி

உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே இனி அவரது பார்வைக்கு பலம் அதிகம் கிடைக்கும். உங்கள் ராசியை குரு 5-ம் பார்வையாக பார்ப்பதால், பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெற்றோர்களின் ஆதரவோடு பெருமை காண்பீர்கள்.

இம்மாதம் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 21, 22, 25, 26, நவம்பர்: 5, 6, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் கண்டகச் சனி வக்ர நிவர்த்தியாகிப் பார்ப்பதால் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கணவன் - மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் ஒற்றுமையைப் பலப் படுத்திக் கொள்ள இயலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. உடல்நலனில் கவனம் தேவை. செவ்வாய் சனியைப் பார்ப்பதால் குடும்பப் பிரச்சினை அதிகரிக்கலாம். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையாது.


Next Story