கடகம் - தமிழ் மாத ஜோதிடம்
சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை
புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு புதுமை படைக்கும் கடக ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் யோககாரகன் செவ்வாய் வீற்றிருக்கின்றார். விரய ஸ்தானத்தில் செவ்வாய் விற்றிருப்பது அவ்வளவு நல்லதல்ல. மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். அஷ்டமத்துச்சனியின் ஆதிக்கமும், வாக்கிய கணித ரீதியாக உருவாகின்றது. இருப்பினும் மாதத் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியைப் பார்க்கின்றார். எனவே முதல் வாரம் முன்னேற்றமாக அமையும். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் வாழ்க்கைப் பாதை சீராகும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டமத்துச் சனியின் வலிமை அதிகரிக்கும். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். தெய்வீக சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சனியின் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கின்றார். அஷ்டமத்துச் சனி நடைபெறுகின்றது. சனி தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும், சில நேரங்களில் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்ய இயலாது. ஆடம்பரச் செலவுகளால் கையிருப்புக் கரையலாம். தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. உடன் இருப்பவர்களால் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படும். உடல்நலத்திலும் கவனம் தேவை.
மேஷ - குரு
சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு வருகின்றார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வருவதால் பதவியில் மாற்றங்கள் உருவாகலாம். குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் அந்தந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன. எனவே அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் வெற்றிகரமாக நடைபெறத் தொடங்கும். குறிப்பாக குடும்பத்தில் இதுவரை நடைபெறாதிருந்த சுபநிகழ்வுகள் இப்பொழுது துரிதமாக நடைபெறத் தொடங்கும். 'நடக்கும் தொழில் மந்தநிலையில் இருக்கின்றதே அதை மாற்றுவோமா? அல்லது புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொண்டு கூடுதல் முதலீடு போட்டு நடத்தலாமா?' என்று குழப்பத்தில் இருந்த உங்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கப்போகின்றது. தன்னம்பிக்கையும், தைரியமும் மிக்க நீங்கள் இப்பொழுது துணிந்து முடிவெடுத்து தொழிலில் லாபம் குவிக்க வழிபிறக்கும். தாயின் உடல்நலம் சீராகும். கடன்சுமை குறையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.
மிதுன - சுக்ரன்
சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பெருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டுவரும் வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
இம்மாதம் அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.
பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 18, 19, 22, 23, 30, மே: 1, 5, 6
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.