மாத ஜோதிடம் : பங்குனி மாத ராசி பலன்கள் 15.03.2022 முதல் 13.04.2022 வரை
பங்குனி மாத ராசி பலன்கள் 15.03.2022 முதல் 13.04.2022 வரை
பேச்சுத் திறமையால் மக்களைத் தன்வசமாக்கும் கடக ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் கண்டகச் சனியின் ஆதிக்கமும், அஷ்டமத்து குருவின் ஆதிக்கமும், சனி - செவ்வாய் சேர்க்கையும் இருக்கிறது. எனவே மனக்குழப்பம் அதிகரிக்கும். பணப்புழக்கத்தில் தடை ஏற்படும்.
மீன - புதன் சஞ்சாரம்
பங்குனி 3-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதி, நீச்சம் பெறுவது யோகம்தான். என்றாலும் 3-ம் இடத்திற்கும் புதன் அதிபதி என்பதால், உடன்பிறப்புகளின் வழியே சச்சரவு ஏற்படக்கூடும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காது. உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். பிறருக்கு பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் நம்பிக்கையோடு தெய்வங்களை வழிபடுங்கள்.
ராகு-கேது சஞ்சாரம்
பங்குனி 7-ந் தேதி, மேஷ ராசிக்கு ராகு செல்கிறார். துலாம் ராசிக்கு கேது செல்கிறார். 10-ம் இடத்தில் ராகு வருவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 'தொழில் முதலீட்டுக்கு பணம் இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
மேஷ - புதன் சஞ்சாரம்
பங்குனி 22-ந் தேதி, மேஷ ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே உடன் பிறந்தவர்களின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீரென இடமாற்றம் வரலாம். அரசு வழியில் சலுகைகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும்.
கும்ப - செவ்வாய் சஞ்சாரம்
பங்குனி 23-ந் தேதி, கும்ப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இதுவரை சனியுடன் இணைந்து சஞ்சரித்து வந்த செவ்வாய், இப்பொழுது கும்பத்தில் உள்ள குருவுடன் இணைகிறார். இதனால் 'குருமங்கள யோகம்' ஏற்படுகிறது. இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்பு உருவாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீண்டும் தொடரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவர். என்னயிருந்தாலும் செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 16, 17, 21, 22, ஏப்ரல்: 1, 2, 5, 6, 13 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
பெண்களுக்கான பலன்கள்
மாதத் தொடக்கத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகலாம். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் வேலைவாய்ப்பு கருதியும், திருமணம் சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு குருப்பெயர்ச்சியின் விளைவாக எதிர்பார்த்த சம்பள உயர்வும், சலுகைகளும் கிடைக்கும்.