கடகம் - தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
மற்றவர்களின் தயவை எதிர்பார்க்காமல் வெற்றிபெறும் கடக ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் செவ்வாயும், சப்தமத்தில் சனியும் இருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் எப்படியாவது கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அவர், பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் உடன்பிறப்பு களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பிரச்சினை, சொத்து பிரச்சினை அதிகரிக்கும். கொடுக்கல் -வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். விரயத்தால் மன நிம்மதி குறையும். வாங்கிய சொத்துக்களை விற்கக்கூடிய நிர்பந்தம் உருவாகும். ஆரோக்கியம் பாதிக்கும்.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாவதால் விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். வழக்குகள் சாதகமாக அமையும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். எனவே வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகள் விலகுவர். சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். 'புதிய கிளைத் தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.
மகரச் சனியின் வக்ர காலம்
உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் கிடைக்கும். இருப்பினும் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். கூட்டுத் தொழில்புரிவோர், கணக்கு வழக்குகளில் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் வீண்பழி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனப் பழுது வாட்டம் தரும். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 15, 16, 24, 25, 30, 31, ஜூன்: 4, 5மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் கண்டகச் சனியும், அஷ்டமத்துச் செவ்வாயும் இருப் பதால் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியக் குறைபாடு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. குரு பார்வை இருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். மனக்குழப்பம் மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் பிரச்சினைகள் வரலாம்.