கடகம் - ஆண்டு பலன் - 2023


கடகம் - ஆண்டு பலன் - 2023
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

புனர்பூசம், 4-ம் பாதம், புனா்பூசம், ஆயில்யம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

மாற்றங்களால் ஏற்றங்கள் வந்துசேரும்

கடக ராசி நேயர்களே!

புத்தாண்டு வரப்போகிறது. உங்கள் ராசிக்கு 7-ல், கண்டகச் சனியாகச் சஞ்சரிக்கும் சனி பகவான், மார்ச் மாதத்திற்கு மேல் அஷ்டமத்துச் சனியாக மாறப்போகிறார். 'அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி, ஓடிப்போனவனுக்கு 9-ல் குரு' என்பது பழமொழி. 8-ம் இடம் சனிக்கு சொந்த வீடு என்பதால் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. இருந்தாலும் பிரச்சினைகள் அலைமோதிக் கொண்டே யிருக்கும். குடும்பம், உத்தியோகம், தொழில், நட்பு, பொதுவாழ்வு போன்றவற்றில் திடீர் திடீரென மாற்றங்களும், ஏற்றங்களும் வரும். வீட்டுப் பிரச்சினை ஓய்ந்தால், உத்தியோக பிரச்சினை, அது ஓய்ந்தால் சொத்துப் பிரச்சினை, சொந்தங்களின் பிரச்சினை என்று, ஆண்டு முழுவதும் சோதனைகள் தோன்றும். சுய ஜாதக அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில் அனுகூலமான ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.

புத்தாண்டு கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் கேதுவும், 10-ம் இடத்தில் ராகு உங்கள் ராசிநாதன் சந்திரனோடு இணைந்தும் சஞ்சரிக்கின்றனர். 7-ம் இடத்தில் சனியும், சுக்ரனும் இருக்கிறார்கள். 6-ம் இடத்தில் தனாதிபதி சூரியனும், விரயாதிபதி புதனும் இருக்க, யோகம் செய்யும் செவ்வாய் லாப ஸ்தானத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். ஆயினும் குரு தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே இருள் விலகி ஒளி பிறக்கும். வறண்ட சூழ்நிலை வளம்பெறும். திரண்ட செல்வங்கள் தேடி வரும். என்றாலும் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், செலவு கூடும்.

குருவின் பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிவதால், ஒருசில நன்மைகளும் கிடைக்கும். உடல்நலக் குறைபாடு அகலும். உடனிருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். உடன்பிறந்தவர்கள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர். பிள்ளைகளால் வந்த பிரச்சினை அகலும். பஞ்சாயத்துக்கள் மூலம் பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். அதை விற்று கடன் சுமையைக் குறைக்க முன்வருவீர்கள்.

கும்ப - சனி சஞ்சாரம்

29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வந்து, 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும் பொழுது, எதிர்பாராத விதத்தில் எண்ணற்ற மாற்றங் களை ஏற்படுத்துவார்.

குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தடைகளும், தாமதங்களும் குறைவாகவே இருக்கும். இருப்பினும் ஒரு வேலையை ஒன்றுக்கு இரண்டு முறை செய்யும் சூழ்நிலை உருவாகும். வீண் விவகாரங்கள் வீடு தேடிவரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியத்திற்காக செலவிடும் சூழ்நிலை உண்டு.

மேஷ - குரு சஞ்சாரம்

22.4.2023 அன்று குரு பகவான், அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகிறது. குரு பார்க்கும் இடங்கள் நல்ல பலன்களை அள்ளி வழங்கும் என்பதால், உங்களுடைய எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். குடும்ப ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். 'காரியங்களைச் செய்யப் பணம் இல்லையே' என்று கவலைப்பட வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் தொடங்கிவிட்டால் நண்பர்களும், உறவினர்களும் உதவி செய்ய முன்வருவர்.

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் சுக ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். தாயின் உடல்நலம் சீராகும். குடும்பத்தில் நீண்ட நாளாகத் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள், தானாக நடைபெறும். வெளிநாட்டுப் பயணங்கள் சாதகமாக அமையும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

6-ம் இடத்தில் குரு பார்வை பதிவதால், எதிரிகள் விலகுவர். எதிர்கால நலன் கருதி செய்த ஏற்பாட்டிற்கு, பணிபுரியும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில், மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். கடன்சுமை ஓரளவு குறையலாம்.

ராகு- கேது பெயர்ச்சி

8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் ராகுவும், 3-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும்போது, தந்தை வழி உறவில் ஆதாயம் கிடைக்கும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு வந்துசேரும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கைகூடி வரும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.

3-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால், முன்னேற்றப் பாதையில் சில சறுக்கல்களை சந்திக்க நேரிடும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வது அரிது. கூட்டுத்தொழிலில் இணைந்திருந்த சகோதரர்கள், விலக வேண்டுமென்று விரும்புவர். உடன்பிறப்பு களின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரியங்களுக்காக பண உதவி செய்ய முன்வருவீர்கள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்க, ராகு - கேதுக்களுக்குரிய பரிகாரங்களை, யோகபலம் பெற்ற நாளில் செய்துகொள்வது நல்லது.

செவ்வாய் - சனி பார்வை

இந்தப் புத்தாண்டில் செவ்வாய் - சனி பார்வை 4 முறை ஏற்படுகிறது. அந்தக் காலங்களில் மிகமிக கவனம் தேவை. அதே நேரத்தில் சனி அஷ்டமாதிபதியாகவும் விளங்குவதால், எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உங்களைப் பொறுத்தவரை குடும்பச்சுமை கூடும். குடியிருக்கும் வீட்டால் தொல்லைகள் வரலாம். பொதுவாழ்வில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொறுப்புகளும், பதவிகளும் பிறருக்கு போய்ச் சேரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் சிக்கல்கள் உருவாகும். அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

ஆண்டு முழுவதும் பவுர்ணமி விரதம் இருந்து அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். யோகபலம் பெற்ற நாளில் திருக்கடையூர் சென்று அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரரை வழிபட்டு வந்தால் தடைகள் தானாக விலகும்.

சனி மற்றும் குரு வக்ர காலம்

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனியால், இந்த காலகட்டத்தில் குடும்ப ஒற்றுமை குறையலாம். எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் வரவும், திடீர் செலவும் உண்டு. நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். பணிபுரியும் இடத்தில் பணிநீக்கம் செய்யும் அளவு பிரச்சினை வரலாம். கவனம் தேவை.

12.9.2023 முதல் 19.12.2023 வரை மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது யோகம்தான். எதிரிகளின் பலம் குறையும். பிரச்சினைகளில் இருந்து விடுபட, முக்கியப் புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும். அதே நேரம் 9-க்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால், பெற்றோர் வழியில் பிரச்சினைகள் அதிகரிக்கும். முடிவடைய இருந்த பஞ்சாயத்துக்கள் தள்ளிப்போகலாம். பொதுவாழ்வில் திடீரெனப் பொறுப்புகள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல்கள் வந்துசேரும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் மிகுந்த விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செய்வதன் மூலமே வெற்றி கிடைக்கும். விரயங்கள் கூடும். கணவன் - மனைவி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவதன் மூலமே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வரவை விட செலவு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்க மறுப்பர். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.


Next Story