மகரம் - தமிழ் மாத ஜோதிடம்


மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Aug 2022 1:01 PM GMT (Updated: 2022-08-16T18:33:01+05:30)

ஆவணி மாத ராசி பலன்கள் 17-08-2022 முதல் 17-09-2022 வரை

உழைப்பின் மூலமே உன்னத வாழ்வு அமையும் என்று கூறும் மகர ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சகாய ஸ்தானாதிபதி குருவும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

சிம்ம - சூரியன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன், 8-ம் இடத்திலேயே மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். எனவே சில இழப்புகளும், விரயங்களும் ஏற்படத்தான் செய்யும். மாற்றங்கள் மனதிற்கு இனியவிதம் அமையுமா என்பது சந்தேகம். உறவினர் பகை உருவாகும். கொடுக்கல்- வாங்கல்கள் பிரச்சினையாகும்.

கன்னி - புதன் சஞ்சாரம்

ஆவணி 8-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 9-ம் இடத்தில் உச்சம் பெறுவதால் பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகல புதிய முயற்சி களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

வக்ர புதன் சஞ்சாரம்

ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் 6-க்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுகிறார். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். எதிர்பாராத நற்பலன்கள் உங்களுக்கு வரலாம். அதே நேரம் 9-க்கு அதிபதியாகவும் புதன் விளங்குவதால், தந்தை வழி உறவில் சில பிரச்சினைகள் உருவாகும்.

சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதி சூரியனோடு இணையும் போது சுபகாரியங்கள் நடைபெறும். தொழிலை விரிவு செய்யும் முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். பாகப்பிரிவினையில் உங்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.

குரு வக்ரமும், சனி வக்ரமும்

மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரமாக இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு அதிபதியான குரு வக்ர இயக்கத்தில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அவர் சகாய ஸ்தானாதிபதி என்பதால், பல நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். சனி வக்ரம் பெறுவதால் சஞ்சலங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த மாதம் வரும் அஷ்டமி தினங்களில் பைரவரை வழிபாடு செய்து வந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 17, 18, 29, 30, செப்டம்பர்: 2, 3, 4, 10, 11, 14, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தாநீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரணையாக செல்வதன் மூலம்தான் குடும்பத்தில் அமைதி நிலவும். வீண் விரயங்கள் அகல சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


Next Story