மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை
எதையும் ஆராய்ந்து அறிந்து அதற்கேற்ப சிறப்பாக செயல்படும் மகர ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அஷ்டமத்தில் புதனும், சுக்ரனும் இருக்கிறார்கள். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.
கன்னி - சுக்ரன் சஞ்சாரம்
புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மீது வக்ர குருவின் பார்வை பதிவதால் இக்காலத்தில் சில நற்பலன்களும் நடைபெறும். திடீர், திடீர் என வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்க முற்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களை பங்கீடு செய்வதில் குழப்பங்கள் ஏற்படும்.
கன்னி - புதன் சஞ்சாரம்
புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் உச்சம் பெறுவது யோகம்தான். பாக்கிய ஸ்தானம் பலமடைகிறது. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலும். உத்தியோகத்தில் திறமைக் குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கடன் சுமை குறைய வழிபிறக்கும். தொழிலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை கேட்டும் கிடைக்காத ஊதிய உயர்வு இப்பொழுது தானாக வந்து சேரும்.
மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் உறவினர்களிடையே பகை உருவாகலாம். உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசுபவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடை அகலும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. ஊர்மாற்றம், இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
சனி வக்ர நிவர்த்தி
புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய பலன்களைக் கொடுக்கும். குறிப்பாக ஜென்மச் சனி வக்ர நிவர்த்தியாவதால் ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களிலும் ஆதாயம் உண்டு.
இம்மாதம் நரசிம்மர் வழிபாடு நன்மைகளை வழங்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 26, 27, 30, அக்டோபர்: 1, 2, 7, 8, 11, 12.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உடல்நிலையிலும் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். குருவும் வக்ர இயக்கத்தில் இருப்பதால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும். பணிபுரியும் பெண்கள் பாராட்டு மழையில் நனைவர்.