மகரம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்
ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை
எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க விரும்பும் மகர ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் ராசிக்கு வரப்போகிறார். அஷ்டமத்தில் ஐந்து கிரகங்கள் இருக்கின்றன. எனவே மிக மிக கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உடல் ஆரோக்கியம், உள்ளத்தில் அமைதி, இல்லத்தில் பொருளாதார நிலை குறையும். கடன்சுமை மட்டும் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை செய்தால் திருப்தியான வாழ்க்கை அமையும்.
கடக - சுக்ரன்
ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்தில் வரும்போது பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். அவர்களின் கல்யாண முயற்சி கைகூடும். 'தொழில் நிலையத்தை மாற்றி அமைக்கலாமா? அல்லது தொழில் நிலையத்தை வீட்டிலேயே வைத்து நடத்தலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
கன்னி - செவ்வாய்
ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு செல்லும் பொழுது எதிர்பார்த்தவை எளிதில் நடைபெறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்த அதிகாரிகள் விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
மகர - சனி
சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் வருகிறார். ஜென்மச் சனியாக இப்பொழுது வருவதால் மனநிம்மதி குறையும். உடல்நலக் குறைவு உருவாகும். உற்சாகமிழந்து காணப்படுவீர்கள். நண்பர்கள் திடீரென விலக நேரிடலாம். தொழிலில் பணியாளர்கள் பிரச்சினை தலைதூக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சனம் செய்ய வேண்டாம். இக்காலத்தில் முறையான வழிபாடுகள் உங்களுக்குத் தேவை.
புதன் வக்ர நிவர்த்தி
சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு'. எனவே தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டே இருக்கும். திடீர், திடீரென புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம், ஊர் மாற்றம் விரும்பத்தக்க விதத்தில் வந்து சேரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு, பங்குதாரர்களால் தொல்லைகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்காது. கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களால் பிரச்சினைகள் உருவாகலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பயிற்சி வகுப்புகளில் பங்குகொள்வது நல்லது. பெண்களுக்கு குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தட்டுப்பாடுகள் அகல, புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.
இம்மாதம் அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 23, 24, 25, 31, செப்டம்பர்: 1, 4, 5, 16, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.