மகரம் - ஆண்டு பலன் - 2023


மகரம் - ஆண்டு பலன் - 2023
தினத்தந்தி 31 Dec 2022 6:45 PM GMT (Updated: 31 Dec 2022 6:47 PM GMT)

உத்ராடம் 2, 3, 4பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

சனி மாற்றத்திற்கு பிறகு சந்தோஷம் அதிகரிக்கும்

மகர ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டு ஜென்மச் சனி விலகிய பிறகு உங்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும். அது மட்டுமல்லாமல் அதன்பிறகு இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி மற்றும் ராகு- கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. அதன் விளைவாக படிப்படியாக நல்ல முன்னேற்றங்கள் வரலாம். வருடத் தொடக்கத்தில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் முதல் மூன்று மாதங்களுக்கு முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். விழிப்புணர்ச்சி யோடு செயல்பட்டாலும் இடையிடையே தடைகளும், தாமதங்களும் வந்து மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபட்டால் திருப்தியான வாழ்க்கை அமையும்.

புத்தாண்டு கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். சகாய ஸ்தானத்தில் குருவும், விரய ஸ்தானத்தில் சூரியனோடு புதனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் இருக்கிறார்கள். சுகாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு தொடங்குகிறது.

புத்தாண்டு தொடங்கும் பொழுது குரு பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையை தளரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தனவரவில் தடைகள் ஏற் பட்டாலும் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். இனத்தார் பகையும், எதிரிகளின் தொல்லையும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். பதவி, உத்தியோகம் போன்றவற்றில் பிரச் சினைகள் ஏற்படாது. இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை நிகழக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஒருசிலருக்கு நீண்ட தூரத்திற்கான இடமாறுதல் கள் வந்துசேரும்.

கும்ப - சனி சஞ்சாரம்

29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் அவர், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் வக்ர இயக்கத்தில் சஞ்சரித்து, எதிர்பாராத திருப்பங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தப் போகிறார். வீண்பழிகளும், சகப் பணியாளர்களால் சிறு சிறு பிரச்சினைகளும் தலைதூக்கலாம். ஆரோக்கியத் தொல்லைக்கு ஆளாக நேரிடும். குடும்ப உறுப்பினர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். எதையும் தங்கள் நேரடிக் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்தால் அது சரியாக நடை பெறாமல் போகலாம். அதன் விளைவாக சில பிரச்சினைகள் வரலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் சச்சரவுக்கு ஆளாக நேரிடும். பொதுவாகவே இது போன்ற காலங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளும், ஆன்மிகப் பெரியவர் களின் அறிவுரைகளும் உங்கள் வாழ்க்கைப் பாதையை சீராக்கும்.

மேஷ - குரு சஞ்சாரம்

22.4.2023 அன்று குரு பகவான் அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்கள் புனிதமடைகிறது. குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் சென்ற வருடத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் உடனுக்குடன் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் சம்பந்தமாக விண்ணப்பித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் 'படித்து முடித்தும் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வேலையும், கைநிறைய சம்பளமும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். 'இந்தத் தொழிலில் இவ்வளவு லாபமா?' என்று கருதும் அளவிற்கு தொழில் வளர்ச்சி பெறும். பொதுநலம் மற்றும் அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்துடன் ஸ்தல யாத்திரைகளைச் செய்ய முன்வருவீர்கள். மேலும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் நேரம் இது. அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டுவர எடுத்த முயற்சி கைகூடும்.

ராகு- கேது பெயர்ச்சி

8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 3-ம் இடமான வெற்றிகள் ஸ்தானத்திற்கு ராகு வருகிறார். எனவே வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். வீரத்தோடும், விவேகத்தோடும் செயல்படுவீர்கள். பங்காளிப் பகை மாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.

9-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் தந்தை வழி ஆதரவு திருப்தி தரும். அண்ணன் - தம்பிகளுக்குள் இருந்த மனக்கசப்புகள் மாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

இப்புத்தாண்டில் 4 முறை செவ்வாய் - சனியின் பார்வை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் செவ்வாய். எனவே இக்காலத்தில் சொந்தங்களாலும், சொத்துக்களாலும் பிரச் சினை அதிகரிக்கும். சிந்தித்த காரியங்கள் வெற்றிபெறுவது கடினம்தான். கடுமையாக உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக் காது. பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

வளர்ச்சி தரும் வழிபாடு

சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனிபகவானை வழிபட்டு வருவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் திருநள்ளாறு மற்றும் திருக்கொள்ளிக் காட்டில் வீற்றி ருந்து அருள்வழங்கும் சனிபகவானை முறையாக வழிபட்டு வந்தால் முன்னேற்றம் அதிகரிக்கும்.

சனி மற்றும் குருவின் வக்ர காலம்

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகர ராசியிலும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 2-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை உண்டு. மருத்துவச் செலவுகள் கூடும். பணப்பற்றாக்குறையின் காரணமாக மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உறவினர்களின் பகை அதிகரிக்கும். நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

12.9.2023 முதல் 19.12.2023 வரை மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான அவர், வக்ரம் பெறும்பொழுது உடன்பிறப்புகளின் உதவி குறையும். உற்சாகத்துடன் செயல்பட இயலாது. உறவினர்களுக்கு உதவி செய்யப் போய் அது உபத்திரவத்தில் முடியலாம். ஊா்மாற்றம், உத்தியோக மாற்றம் எளிதில் கிடைக்கும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் ஏழரைச் சனி, ஜென்மச் சனியில் இருப்பதால், பொறுமையும், நிதானமும் தேவை. கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். தாய்வழி ஆதரவு உண்டு. சனி பகவான் கும்ப ராசிக்குச் சென்ற பிறகு ஓரளவு நற்பலன்கள் படிப்படியாக நடைபெறத் தொடங்கும். வீடு மாற்றம், இடமாற்றம் விருப்பம் போல் அமையும். வீண் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லாத இடமாறுதல்கள் கிடைக்கலாம்.


Next Story