மிதுனம் - ஆண்டு பலன் - 2022


மிதுனம் - ஆண்டு பலன் - 2022
தினத்தந்தி 23 May 2022 8:41 PM IST (Updated: 23 May 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

(மிருகசீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

ஏப்ரலுக்குப் பிறகு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

மிதுன ராசி நேயர்களே!

பிறக்கப் போகும் இந்தப் புத்தாண்டு, உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆண்டாகவே அமையப் போகிறது. வருடத் தொடக்கத்தில் குருவின் பார்வை, உங்களுக்கு வளர்ச்சியை வழங்கும். உடல் நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன்சுமை குறையும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். கிரகங்கள் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுதும், பகைக் கிரகத்தின் பார்வை படும்பொழுதும், யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு பரிகாரங்களைச் செய்வதன் மூலம் செல்வ நிலை உயர வழிபிறக்கும்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இதனால் பொருளாதாரம் மித மிஞ்சியதாக இருக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிப்பீர்கள். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகும். 12-ல் ராகு இருப்பது, பயணங்களை அதிகரிக்கும்.

6-ம் இடத்தில் கேது, சந்திரன், செவ்வாய் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். சூரியன் சப்தம ஸ்தானத்தில் இருப்பதால் அரசு வழி அனுகூலம் கிடைக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். 'சந்திர மங்கள யோக'த்தால் சுபச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். புதிய தொழில் மற்றும் புதிய உத்தியோகங்கள் தகுதிக்கேற்ப கிடைக்கும்.

கும்ப குருவின் சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு குரு பகவான், 9-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அப்பொழுது அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். உத்தியோகத்தில் எடுத்த புது முயற்சி வெற்றிபெறும். சகோதர அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துத் தகராறு அகலும். முன்னோர்களால் கட்டப்பட்டு, சிதிலமடைந்த ஆலயங்களை பராமரிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

ராகு-கேது பெயர்ச்சி

21.3.2022 அன்று, ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இப்போது 11-ம் இடத்திற்கு ராகுவும், 5-ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். இதன் விளைவாக லாப ஸ்தானம் பலம்பெறுவதால் வருமானம் இருமடங்காக உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். கேதுவின் ஆதிக்கத்தால் பிள்ளைகளின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிலர் பூர்வீக சொத்துக்களை விற்க நேரிடும். ஆலயத் திருப்பணிகளை முன்நின்று நடத்துவீர்கள்.

குருப்பெயர்ச்சி

13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பெயர்ச்சியாகிச் செல்கிறார். அது குருவிற்கு சொந்த வீடாகும். மீனத்தில் இருந்தபடி, உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களை குரு பார்க்கிறார். இதனால் குடும்ப முன்னேற்றம் உயரும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. சொந்த பந்தங்களின் பகை மாறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள் மகிழ்ச்சி தரும்.

சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. குறிப்பாக தொழிலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். பணிபுரியும் இடத்தில் பகை உருவாகும். கூடுதல் கவனத்தோடு செயல்பட்டாலும் குறை கூறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். எதைச் செய்தாலும் யோசித்தும், இறைவனை பூஜித்தும் செய்ய வேண்டிய நேரம் இது.

8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். இது ஒரு இனிய நேரம்தான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது தொழில் வளம் சிறப்பாகும். திருமண முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பயணங்கள் பலன் தருவதாக இருக்கும். நீண்ட நாட்களாக நடைபெறாத சில காரியங்கள், துரிதமாக நடைபெறும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

ஆண்டு முழுவதும் நற்பலன் கிடைக்க பெருமாளையும், லட்சுமிதேவியையும் வழிபாடு செய்யுங்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இப்புத்தாண்டு விரயங்களை அதிகரிக்கச் செய்யும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் தேவைப்படும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பிறரிடம் பணப்பொறுப்பைக் கொடுக்கும் முன்பு யோசித்து செய்யுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு இனிமை தரும் இடமாற்றம் அமையலாம்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி - செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் எதைச் செய்தாலும், அதை பிறர் குறை கூறவே செய்வார்கள். அமைதி குறையும். பண நெருக்கடி அதிகரிக்கும். வாகனத்தால் தொல்லைகள் வந்துசேரும். புதியவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது, உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் பகையாக மாறலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.


Next Story