சிம்மம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
(மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்
ஒன்பதில் வருகிறது ராகு; உன்னத வாழ்க்கை இனிமேல் சிம்ம ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி 9-ம் இடத்திற்கு வரப்போகிறார். கேது பகவான் அதே நாளில் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் இருந்து வெற்றிகள் ஸ்தானமான 3-ம் இடத்திற்கு செல்கிறார். அங்குள்ள நட்சத்திரக் கால்களில் வரும்பொழுது அவற்றிற்கேற்ப ஒன்றரை ஆண்டு காலம் பலன்களை வழங்குவார்கள்.
9-ம் இடத்தில் ராகு, 3-ம் இடத்தில் கேது
ராகு பகவான் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். இதனால் உங்கள் பாக்கிய ஸ்தானம் பலப்படுகிறது. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். தந்தை வழி உறவில் ஆதாயம் உண்டு. தர்ம காரியம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். பங்காளிகள் பக்கபலமாக இருப்பர். பதவி வாய்ப்புகள் தானாக வந்து சேரும். மங்கல காரியங்கள் மனையில் நடைபெறும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் உடன்பிறப்புகள் உதவிகரமாக இருப்பர். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பகல் இரவாக பாடுபட்டதற்கு பலன் கிடைக்கும். உற்சாகத்தோடு பணிபுரிந்து உயர்ந்த நிலையை அடைய முயற்சிப்பீர்கள். பொருளாதாரத்தில் இதுவரை இருந்த பற்றாக்குறை அகலும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும்.
சூரிய சாரத்தில் ராகு சஞ்சாரம்(21.3.2022 முதல் 22.5.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். அருளாளர்களின் ஆலோசனைகளும், அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளும் அவ்வப்போது கை கொடுக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நிறைய நடைபெறும். தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள். சொத்துக்கள் வாங்குவதும், விற்பதும் கைவந்த கலையாகும். என்னயிருந்தாலும் ராகு பகை கிரகத்தின் காலில் சஞ்சரிப்பதால், தொழிலில் ஏற்ற இறக்க நிலை வந்து கொண்டுதான் இருக்கும். திசாபுத்திக்கேற்ற சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் நிலைமை உடனடியாக மாறலாம்.
சுக்ரன் சாரத்தில் ராகு சஞ்சாரம் (23.5.2022 முதல் 28.1.2023 வரை)
பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், தொழிலில் லாபமும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவரது காலில் ராகு வரும்பொழுது முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். கண்ணேறு படும் விதத்தில் உங்கள் வளர்ச்சி இருக்கும். தொழிலுக்கு தேவையான மூலதனம் கிடைக்கும். இதுவரை நெருக்கடி நிலையில் இருந்த நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். பலநாட்களாக நடைபெறாத காரியம் இப்பொழுது சிறப்பாக நடைபெறும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)
அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வருமானம் போதுமானதாக இருக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் நட்பால் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்து இணைவர். தனவரவு திருப்தி தரும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் செல்ல முக்கியப் புள்ளிகள் வழிவகுத்துக் கொடுப்பர்.
குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)
விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். அசையாச் சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினையை பஞ்சாயத்துக்கள் மூலம் சரிசெய்வீர்கள். மனச்சஞ்சலங்கள் அகலும். வீடு மற்றும் சொத்துக்கள் வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஊக்குவிப்பு உற்சாகத்தைக் கொடுக்கும். வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும்.
ராகுவின் சாரத்தில் கேது சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)
சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பயணங்களால் பலன் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கல்யாணம் சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல் களில் பெரிய அளவில் முதலீடு செய்வீர்கள். எதையும் சாதிக்கும் நம்பிக்கையோடு செயல்படுவீர்கள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றியும் காண்பீர்கள். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)
சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாயின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, உங்களுக்கு யோகமான நேரம்தான். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வருவர். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். திடீர் தனவரவும் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழில் தனித்தொழிலாக மாறும். கொடுக்கல் வாங்கல்களில் திருப்தி ஏற்படும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகவே அமையும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில், குரு பகவான் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார். ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசிக்கு குரு பெயர்வதால், பொருளாதார நிலை திருப்தி தரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அருளாளர்களின் ஆதரவோடு சில நல்ல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பயணங்கள் பலன் தரும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். 22.4.2023 அன்று மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். அங்கிருந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், எல்லா வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இதுவரை நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
சனிப் பெயர்ச்சிக் காலம்
16.3.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். அப்பொழுது உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சனி வருவதால் கண்டகச் சனி நடைபெறப் போகிறது. எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் உருவாகலாம். வெளிவட்டாரப் பழக்க வழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை. உடல்நலக் குறைபாடுகளும், வைத்தியச் செலவுகளும் மேலோங்கும். நினைத்த காரியம் நடைபெறுவதில் தடைகள் அதிகரிக்கும். நேசித்த நண்பர்கள் பகையாக மாறுவர்.
பெண்களுக்கான பலன்கள்
இந்த ராகு-கேது பெயர்ச்சி நன்மை தரும் விதத்திலேயே உங்களுக்கு அமையப் போகின்றது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு கண்டகச் சனியின் ஆதிக்கம் வருவதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வும் உண்டு. இல்லத்தில் தினமும் திருவாசகம் படித்து சிவன் உமையவளை வழிபடுங்கள்.