மீனம் - தமிழ் மாத ஜோதிடம்


மீனம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை

முயற்சி ஒன்றே வாழ்வில் முன்னேற வழி என்றுரைக்கும் மீன ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, உங்கள் ராசியிலேயே பலம் பெற்று சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை உங்கள் ராசியின் மீது பதிகிறது. எனவே பொருளாதார நிலை திருப்தி தரும்; என்றாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும்.

புதன் வக்ர இயக்கம்

உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். தாய்வழி ஆதரவு உண்டு. வீடு வாங்கும் முயற்சியில் இதுவரை இருந்த குழப்பங்கள் அகலும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும். தெய்வப் பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கலாம்.

மகர - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3, 8-க்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கின்றார். அவர் 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகளுக்கு வேலை கிடைத்து அதன் மூலமும் வருமானம் வரலாம். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வருங்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணி ஓய்வு பெற்ற பிறகும் கூட நீங்கள் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.

புதன் வக்ர நிவர்த்தி

மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படலாம். தொல்லை தரும் எதிரிகளின் பலம் மேலோங்கும். 'தீட்டும் திட்டங்களை செயல்படுத்த இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். மனக்குழப்பம் உருவாகும். வருமானம் திருப்தி தரும் என்றாலும் விரயங்கள் கூடுதலாக இருக்கும். புதுமுயற்சிகளில் ஈடுபடும்பொழுது பொறுமையும், நிதானமும் தேவை.

செவ்வாய் வக்ர நிவர்த்தி

மார்கழி 29-ந் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொகை வரவும் திருப்தி தரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து புதிய தொழில் ஒன்றை தொடங்க முன்வருவர்.

செவ்வாய் 9-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குவதால் பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் அல்லது இல்லம் வாங்கிக் குடியேற வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு அதுவும் கைகூடும். பெற்றோர் வழி உறவில் நெருக்கம் ஏற்படும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தீர்த்த யாத்திரை மற்றும் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 21, 22, 26, 27, ஜனவரி: 1, 2, 6, 7. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ராசிநாதன் குரு பலம்பெற்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் பலன்தரும். பக்கத்தில் உள்ளவர்களின் பகைமாறும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் கேட்ட இடத்திற்கு இடமாறுதலும் கிடைக்கும்.


Next Story