தனுசு - ஆடி தமிழ் மாத ஜோதிடம்
ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை
திட்டம் போட்டுச் செயலாற்றும் தனுசு ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். சகாய ஸ்தானாதிபதி சனி வக்ரம் பெற்றிருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் ஒன்று கூடி 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார்கள். பொதுவாக குரு பகவான் ராசியைப் பார்க்கும் பொழுது, எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும். நல்லது நடக்க நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நாட்டுப்பற்று மிக்கவர்களுக்கு நல்ல பொறுப்புகள் வந்துசேரும். கூட்டு முயற்சியில் இருந்து விலகித் தனித்து இயங்க வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
மேஷ - குரு சஞ்சாரம்
நவக்கிரகத்தில் சுபகிரகமான குரு பகவான் இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். குரு உங்கள் ராசிக்கு அதிபதி என்பதால், அவரது பார்வை சிறப்பு வாய்ந்ததாகும். உங்கள் ராசியையும், 9, 11 ஆகிய இடங்களையும் பாா்ப்பதால், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கப் போகிறது. தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பார்க்கும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
குருவின் பார்வை 9,11 ஆகிய இடங்களில் பதிவதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அன்பு நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். ஆதாயம் தரும் தகவல் அதிகமாகவே கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். லாப ஸ்தானம் புனிதமடைவதால் தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
சிம்ம - புதன்
ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்து உள்ளத்தை மகிழ்விக்கும். இடம் வாங்குவது, வாங்கிய இடத்தில் மனை கட்டத் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உடன் பணிபுரிபவர்களிடம் உங்கள் முன்னேற்றம் பற்றித் தெரிவிக்க வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகள், ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு நல்ல முன்னேற்றம் காண்பர். பெண்களுக்கு குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 21, 22, 25, 26, ஆகஸ்டு: 2, 3, 6, 7, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.