தனுசு - தமிழ் மாத ஜோதிடம்
கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை
அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் தனுசு ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் குரு வக்ர நிவர்த்தியாகிச் சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல, தனாதிபதி சனியும் பலம் பெற்றுவிட்டார். எனவே இந்த மாதம் இனிய மாதமாக உங்களுக்கு அமையும்.
சனி மற்றும் குருவின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகி பலம் பெறுகிறார். எனவே குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராக இருக்கும். சகோதர வர்க்கத்தினர் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நீண்ட நாளாக நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையலாம். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.
உங்கள் ராசிநாதனாகவும், சுக ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர், குரு பகவான். அவர் இம்மாதம் வக்ர நிவர்த்தியாகி பலம் பெறுவதால் உடல்நலம் சீராகும். ரண சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொன்ன மருத்துவர்கள், உங்கள் நோயை சாதாரண சிகிச்சையிலேயே குணப்படுத்திவிடுவர். தொழில் வளம் சிறப்பாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகி மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பகையானவர்கள் உறவாக மாறுவர். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும்.
தனுசு - புதன் சஞ்சாரம்
கார்த்திகை 12-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், உங்கள் ராசிக்கே வருவது யோகம்தான். வாழ்க்கைத் துணை அமையாதவர்களுக்கு அதற் கான யோகம் அமையும். 'வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானம் வந்து சேரும். தொழில் மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். புதிய நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். சுயஜாதகம் பலம்பெற்று இருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். பொதுவாக இக்காலத்தில் தொட்ட காரியங்கள் யாவும் வெற்றி பெறும்.
ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்
கார்த்திகை 13-ந் தேதி ரிஷப ராசிக்கு செவ்வாய் வக்ர இயக்கத்தில் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வக்ர இயக்கத்தில் இருப்பதால் பிள்ளைகள் வழியில் விரயங்களும், பிரச்சினைகளும் ஏற்படும். சுபவிரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியலாம். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். பூமி விற்பனையில் சில பிரச்சினைகள் தோன்றும். பங்குதாரர்களால் தொல்லையும், பத்திரப் பதிவில் தடைகளும் வரலாம். எதையும் கொஞ்சம் யோசித்து செய்வது நல்லது. இடமாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வந்துசேரும்.
தனுசு - சுக்ரன் சஞ்சாரம்
கார்த்திகை 21-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் பொழுது உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல்களும் வந்துசேரும். பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உறவினர்களின் உதவி உண்டு.
இம்மாதம் வியாழன் தோறும் குருவை வழிபடுவதன் மூலம் குதூகலத்தை தக்க வைத்துக் கொள்ள இயலும்.
பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 17, 18, 22, 23, 29, 30, டிசம்பர்: 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் உங்கள் ராசிநாதன் குருவும், தனாதிபதி சனியும் வக்ர நிவர்த்தியாகி பலம் பெற்றிருக்கிறார்கள். எனவே எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத தன லாபமும் இல்லம் தேடி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் கணவன் - மனைவி உறவு பலப்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரும். பணியில் பொறுப்புகள் கிடைக்கலாம்.