தனுசு - தமிழ் மாத ஜோதிடம்
தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை
பிறர் உள்ளத்தில் உள்ளதை சுலபமாக அறியும் தனுசு ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் பாதச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் ராசியிலேயே சப்தம ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதன் வீற்றிருக்கிறார். எனவே நினைத்த காரியங்கள் நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
இம்மாதம் உங்கள் ராசிநாதன் குரு சொந்த வீட்டில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வாக்கு ஸ்தானத்தில் சனி, சூரியன், சுக்ரன் சேர்க்கை இருப்பதால், ஒரு சில சமயங்களில் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் சூழ்நிலை உண்டு. வருமானப் பற்றாக்குறை அகலும்.
5-ல் ராகுவும், 11-ம் இடத்தில் சந்திரனோடு கேதுவும் உள்ளனர். 6-ல் செவ்வாய் இருக்கிறார். ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிக்கிறார். எனவே பிள்ளைகளின் வழியில் விரயங்கள் ஏற்படலாம். கேதுவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியப் பாதிப்புகள் உண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் பொதுவாழ்வில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுங்கள். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
சூரியன் - சனி சேர்க்கை
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. இரண்டு முரண்பாடான கிரகங்களின் சேர்க்கை நல்லதல்ல. உங்கள் ராசிக்கு சனி நன்மை செய்யும் கிரகம் என்பதாலும், ஆதிபத்யங்களின் அடிப்படையில் நன்மை தரும் இடங்கள் என்பதாலும் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் பெற்றோர் வழியில் பிரச்சினைகள் உருவாகும். புதிய கூட்டாளிகளை நம்பி எதுவும் செய்ய இயலாது. யாருக்கேனும் வாக்குக் கொடுத்தால் கொடுப்பதற்கு முன் யோசிப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் மிகமிக கவனத்தோடு செயல்படுவது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுப்பர். அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களால் சில பிரச்சினைகள் வரலாம். தேவைக்கேற்ற பணம் வந்தாலும் மன நிம்மதி இருக்காது.
கும்ப - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தை 9-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். சகாய ஸ்தானத்திற்கு சுக்ரன் வருகையில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு வந்துசேரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். பய உணர்வு மாறும். வரவேண்டிய பதவி உயர்வு தானாக வந்து சேரும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மகர - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால், தனவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். நட்பால் நன்மை கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்படும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். சேமிப்பு உயரும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும்.
இம்மாதம் புதன்கிழமை தோறும் கிருஷ்ணன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 16, 17, 22, 23, 26, 27, பிப்ரவரி: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.