தனுசு - தமிழ் மாத ஜோதிடம்
மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை
எதிலும் உண்மையை அறிந்து ெசயல்படும் தனுசு ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சுக ஸ்தானத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைக் கேது பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதி புதன், சனியோடு தன ஸ்தானத்தில் கூடியிருக்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. உங்கள் ராசிநாதன் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். ஏழரைச் சனியில் பாதச் சனியின் ஆதிக்கம் நடக்கிறது. எனவே பொருளாதார நிலை உயரும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 6, 11-க்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெற்று குருவோடு இணையும் போது எதிர்பார்த்த இனிய மாற்றங்கள் வரலாம். குறிப்பாக மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களுக்கு ஆதரவு தருவர். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் தருவதாக சொல்லி, வெளிமாநிலங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். அதை உங்கள் வசதியைக் கருத்தில் கொண்டு பயன்படுத்திக்கொள்வது நல்லது.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது திருமண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். தொழிலில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு வணிகம் லாபம் தரும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதி நீச்சம் பெறும் பொழுது, வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் கூடும். தொழில் மந்த நிலையில் இருக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பர். வேறு வேலைக்குச் செல்லலாமா? என்று சிந்திப்பீர்கள்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதி, 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது, பிள்ளைகளின் வேலைக்காக எடுத்த முயற்சி பலன் தரும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். அங்கிருந்து மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கப் போவதால் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. குடும்பச் சுமை கூடும். மற்றவர்களுக்காக நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- பிப்ரவரி: 19, 20, மார்ச்: 6, 7, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் ராசிநாதன் குரு பலம் பெற்றிருப்பதால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் பெருகும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். அவர்களின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளையும் வழங்குவர். செவ்வாய், சனி பார்வைக் காலத்தில் மிகமிக கவனத்தோடு செயல்படுவது நல்லது.