தனுசு - ஆனி தமிழ் மாத ஜோதிடம்


தனுசு - ஆனி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 2:09 PM IST)
t-max-icont-min-icon

ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை

எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். சகாய ஸ்தானத்தில் சனி பகவான் உலா வருகிறார். எனவே மனப்போர் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்தி தரும். குரு பார்வையால் குடும்பத்தில் இதுவரை நடைபெறாதிருந்த காரியம் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவதோடு, அதற்கேற்ற விதத்தில் கூடுதல் பொறுப்புகளையும் கொடுக்கலாம்.

மிதுன - புதன்

ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திற்கு அதிபதியான புதன், அங்குள்ள சூரியனோடு சேர்ந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே நல்ல நிகழ்ச்சிகள் பலவும் இல்லத்தில் நடைபெறும். குறிப்பாக கல்யாணம், காதுகுத்து, மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்ற விழாக்கள் தாமதமின்றி நடைபெற வழிபிறக்கும். புதன் தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குவதால் அரசு வழி ஆதரவோடு புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும்.

சிம்ம - செவ்வாய்

ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். குரு பகவான் பார்வை செவ்வாய் மீது பதிந்து 'குரு மங்கல யோகம்' உருவாகின்றது. இக்காலத்தில் முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

சிம்ம - சுக்ரன்

ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாகப் பெண்களால் பெருமைசேரும். வெளிநாட்டில் பணிபுரிய முயற்சித்தவர்களுக்கு அழைப்பு வரலாம். குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது பதிவதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் தொழில் சம்பந்தமாக எடுத்த புது முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமல் போகலாம். உறவினர் வழியில் மன ஸ்தாபங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

கடக - புதன்

ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான புதன் 8-ல் வரும்பொழுது, வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் கிடைத்து வருமானம் வரலாம். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வரலாம். கடன்சுமை படிப்படியாகக் குறையும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சி வெற்றிதரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சி வெற்றிதரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு புதிய துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களின் மூலம் நன்மை வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி படிப்பு சிறப்பாக அமையும். பெண்களுக்கு குடும்ப நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 23, 24, 25, 28, 29, ஜூலை: 5, 6, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.


Next Story