தனுசு - தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனுசு ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான் சுக ஸ்தானத்தில் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் கேதுவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் சுக ஸ்தானத்திற்கு செல்லும்போது, ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்து இயங்க முற்படுவர். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 5, 12-க்கு அதிபதியானவர் செவ்வாய். 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் உறுதியாகும். பிள்ளைகளின் போக்கில் திடீர் மாற்றம் உருவாகலாம். வாங்கிய பூமியை விற்க நேரிடலாம்.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி வக்ர நிவர்த்தியாவதால் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். எனவே உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். 6, 11-க்கு அதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகளின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெற்று, சுயதொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
மகரச் சனியின் வக்ர காலம்
வைகாசி 11-ந் தேதி, உங்கள் ராசிக்கு தனம் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணப்புழக்கத்தில் தடை ஏற்படும். தொழில் மூலதனத்திற்கு செய்த ஏற்பாடு தாமதப்படும். மனக் கலக்கம் அதிகரிக்கும். பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். கடன்கள் வசூலாவது அரிது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாத அளவிற்கு பிரச்சினைகள் வரலாம்.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் வராகி அம்மனை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 15, 16, 21, 22, 25, 26, ஜூன்: 6, 7, 11, 12மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் உடல்நலனில் கவனம் தேவை. சுபச்செலவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் பிரச்சினை ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் வேலை மற்றும் திருமணத்திற்கான வாய்ப்புகள் கைகூடும். சனியின் வக்ர காலத்தில் சஞ்சலங்கள் கூடலாம். பணிபுரியும் இடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.