தனுசு - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்
புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை
எதிர்காலச் சிந்தனையிலேயே எப்பொழுதும் மூழ்கியிருக்கும் தனுசு ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, ஏழரைச் சனியில் குடும்பச் சனியாக வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் தாக்குதல்கள் வரலாம். வழக்குகள் தொடரும். வருமானப் பற்றாக்குறையின் காரணமாக ஒருசிலர் கடன்களை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. எந்தப் புது முயற்சியில் ஈடுபட்டாலும் அனுபவஸ்தர்களையோ, ஆன்மிகப் பெரியவர்களையோ ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது.
புதன் வக்ரம்
புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அதே நேரத்தில் அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்குத் தொழில் ஸ்தானாதிபதி புதன் வக்ரம் பெற்றாலும் யோகம்தான். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை செயலாகும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் திடீர் தாக்குதல்களும், வைத்தியச் செலவுகளும் ஏற்படும். பெற்றோரின் உடல்நலத்திலும் பிரச்சினைகள் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இருப்பினும் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும்.புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வருவதால் விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டேயிருக்கும். எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டுமே என்று நினைக்க வேண்டாம். காரியத்தை தொடங்கிவிட்டால் பணப்புழக்கம் வந்துசேரும். அதுமட்டுமல்ல கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். சொத்து விற்பனையால் லாபங்களும் உண்டு.
துலாம் - புதன்
புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியான புதன், லாப ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். தொழில், உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானமும் வரலாம். பணி ஓய்வுபெற்ற பிறகும் உங்களுக்கு வேலை கிடைத்து வருமானம் வரலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல அழைப்புகள் வரும். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு குறுக்கீடு சக்திகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படும். மாணவ-மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். எனவே ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. பெண்களுக்கு நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். நல்ல வாய்ப்பு வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. குடும்பச் சுமை அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 19, 22, 25, 26, 29, 30, அக்டோபர்: 11, 12, 16, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.