தனுசு - ஆண்டு பலன் - 2022


தனுசு - ஆண்டு பலன் - 2022
தினத்தந்தி 23 May 2022 8:48 PM IST (Updated: 23 May 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

(மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்

தனுசு ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டு இனிய பலன்களை உங்களுக்கு வழங்கப் போகிறது. வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது நடைபெறுகிறது. சனியோடு புதனும், சுக்ரனும் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். எனவே சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். இந்த ஆண்டில் வக்ர இயக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகோதர சகாய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். வாக்கு ஸ்தானத்தில் சனி, புதன், சுக்ரன் வீற்றிருக்கின்றனர். விரய ஸ்தானத்தில் சந்திரனோடு செவ்வாய், கேது இணைந்துள்ளனர். 6-ல் ராகு பலம் பெற்றிருக்கிறார்.

எனவே இந்த ஆண்டு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக் கலாம். பிள்ளைகளால் வந்த தொல்லை அகலும். 'புத சுக்ர யோக'மும், 'சந்திர மங்கள யோக'மும் இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம் உள்ளதால் ஏற்ற இறக்கம் இல்லாத வாழ்க்கை அமைய சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வது நல்லது. மீன குருவின் சஞ்சார காலத்தில் மிகச்சிறந்த பலன்கள் வந்து சேரும்.

கும்ப குருவின் சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரித்தாலும், அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே திருமணத் தடை அகலும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வரலாம். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும்.

ராகு-கேது பெயர்ச்சி

21.3.2022 அன்று, ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இந்தப் பெயர்ச்சிக்குப்பிறகு 5-ம் இடத்தில் ராகுவும், 11-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். பஞ்சம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் திருப்தி ஏற்படாது. பொருள் விரயங்கள் அதிகரிக்கும். 11-ம் இடத்தில் கேது இருப்பதால் பயணங்களால் விரயங்கள் உண்டு. அலைச் சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. புதிய பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படலாம். பூமி வாங்கும் பொழுது வில்லங்கம் பார்த்து வாங்குங்கள். எந்த காரியத்தைச் செய்வதாக இருந் தாலும், அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டு பிறகு செய் யுங்கள். குல தெய்வ வழிபாடு மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.

குருப்பெயா்ச்சி

13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். அது குருவிற்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, தன்னுடைய பார்வையை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிக்கிறார். எனவே இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும். இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம், இல்லம் வாங்கிக் குடியேறும் வாய்ப்பு ஈடேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். பொருளாதாரம் நிறைவாக இருக்கும்.

சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டும். கொடுக்கல் -வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். விரோதங்கள் அதிகரிக்கலாம். வீடுமாற்றங்களும் இடமாற்றங்களும் ஏற்படலாம். எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வதுதான் நல்லது.

8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும் விளங்குபவர் குருபகவான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, மிகுந்த நற்பலன்கள் வந்து சேரும். தாயின் உடல் நலம் சீராகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். சொந்தங்களின் பகை மாறும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

இந்தப் புத்தாண்டு முழுவதும் வியாழக்கிழமைகளில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை இன்முகத்தோடு வழிபடுவது நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் குடும்ப முன்னேற்றம் கூடும். ஆடை, ஆபரணங்கள் மட்டுமல்லாமல், குடும்பத்திற்குத் தேவையான அதிநவீனப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி -செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை, செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகிறது. இரண்டு முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக விரயங்கள் கூடுதலாக இருக்கும். நண்பர்கள் பகையாகலாம். எதிரிகளின் பலம் மேலோங்கும். வழக்குகள் எதிர்பார்த்த முடிவைக் கொடுக்காது. வாங்கிய பூமியால் பிரச்சினைகள் வரலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு வீண்பழிகள் வரலாம்.


Next Story