விருச்சகம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - சோப கிருத ஆண்டு


விருச்சகம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - சோப கிருத ஆண்டு
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

14.4.2023 முதல் 13.4.2024 வரை

(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவா்களுக்கும்)

தொட்ட காரியங்களில் வெற்றி!

மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்யும் விருச்சிக ராசி நேயர்களே!

தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அதிகம் பெற்ற உங்களுக்கு இந்த சோபகிருது புத்தாண்டு செல்வச் செழிப்புடன் கூடிய வாழ்வை அமைத்துக் கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் பெருகும். ஆண்டின் தொடக்கத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். தொழில் முன்னேற்றமும் தொட்ட காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால் ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப் போகின்றது.

தொடக்கத்தில் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருக்கின்றது. கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ர இயக்கத்தில் மகர ராசிக்கு வந்து சில மாதங்கள் சஞ்சரித்து, அதன் பிறகு 20.12.2023-ல் மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கின்றார். இதன் விளைவாக குடும்பத்தில் சுபகாரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறலாம். பேச்சுத் திறத்தால் பெரும் லாபம் கிடைக்கும்.

இடையில் மூன்று முறை சனி, செவ்வாயின் பார்வை ஏற்படுகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் இதுபோன்ற நேரங்களில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உணர்ச்சி வசப்படுவதை தவிர்ப்பது, உடனிருப்பவர்களை அனுசரிப்பதும் தான் உயர்வுக்கு வழிகாட்டும். 8.10.2023-ல் மீன ராசிக்கு ராகு செல்கின்றார். உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கப்போகின்றார். இந்த கிரக மாற்றங்களின் அடிப்படையில் தான் உங்களுக்கு பலன்கள் அமையப் போகின்றது.

உங்கள் சுய ஜாதகத்தில் வலிமை வாய்ந்த திசாபுத்திகள் நடைபெற்றால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். தொழிலில் லாபம் குவியும். உத்தியோகம் உயர்நிலை அடையும். திசாபுத்தி பலமிழந்திருந்தால் யோகபலம் பெற்ற நாளில் உங்கள் எண்ணங்களை ஈடேற்றும் தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வரவேண்டும்.

குருப்பெயர்ச்சி!

சித்திரை 9-ந் தேதி (22.4.2023) அன்று மேஷ ராசிக்கு குரு பகவான் வருகின்றார். அவரது பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. குரு பார்க்கும் இடங்கள் அனைத்தும் புனிதமடைந்து நற்பலன்களை வழங்கும். அந்த அடிப்படையில் வாக்கு, தனம், குடும்பம் என்று சொல்லப்படும் இடத்தையும், தொழில் ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்தையும் குரு பகவான் பார்ப்பதால் திரண்ட செல்வம் உங்களைத் தேடிவரப்போகின்றது.

10-ம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால் கூட்டு முயற்சிகளில் இதுவரை வெற்றி கண்டுவந்த நீங்கள் இனிமேல் தனியாக செய்யும் முயற்சியிலும் தனலாபத்தை குவிக்கப்போகிறீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் வரலாம். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பர். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும் எதிர்பார்த்த விதத்தில் வந்துசேரும்.

கும்பச்சனி!

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 6, 10 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் ஜீவன ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே உத்தியோகத்தில் பணிச்சுமை கூடினாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. அரசுப் பணிக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். செய்தொழில் எதுவாக இருந்தாலும் வருமானம் திருப்தி தரும். ஆனால் உடனுக்குடன் விரயங்களும் வந்து சேரும். வீடு கட்ட, வாகனம் வாங்கக் கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கைகூடும். ெவளிநாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வந்து அலைமோதும்.

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரமும் பெறுகின்றார். பின்னர் 24.8.2023 முதல் மகரத்திற்கு வந்தும் வக்ரமாக இருக்கிறார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்கு முறையாக பெயர்ச்சியாகிச் செல்கின்றார். மகரத்திலும், கும்பத்திலும் சனி சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியம் சீராக இருக்கும். தாயின் உடல்நலம் சீராகும். சகோதர வர்க்கத்தினர் ஒருசிலர் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுப்பர். அதனால் பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களிடம் உள்ள பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அதன் விளைவாக சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் அது கிடைத்தால் யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளால் அதிகம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ளலாம்.

ராகு-கேது பெயர்ச்சி!

8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கப் போவதால் பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறப்போகின்றது. பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறலாம். 'படிப்பிற்கேற்ற வேலை இல்லையே' என்று கவலைப்பட்டாலும், இப்பொழுது பொருத்தமான வேலை கிடைத்து நல்ல சம்பளமும் வந்து சேரும். பாகப்பிரிவினை மூலம் கிடைத்த சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். இக்காலத்தில் யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை, உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து செய்து வந்தால் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை வழங்குவார். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். வீடுகட்ட அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்க நினைப்பவர்களுக்கு அது கைகூடும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற முன்வருவீர்கள். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட கேதுவை வழிபடுவதோடு, விநாயகப் பெருமானையும் வழிபடுவது நல்லது.

வளர்ச்சி தரும் வழிபாடு!

புத்தாண்டு உங்களுக்குப் பொன் கொழிக்கும் ஆண்டாக அமைய, சனிக்கிழமை தோறும் அனுமன் கவசம் பாடி அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். யோக பலம் பெற்ற நாளில் தஞ்சை மாவட்டம் பூந்தோட்டத்தில் உள்ள சரஸ்வதி கோவிலுக்குச் சென்று கலைவாணி கவசம் பாடி கலைவாணியை வழிபட்டு வந்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கான பலன்கள்!

இந்தப் புத்தாண்டு இனிய பலன்களை உங்களுக்கு வழங்கும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சிக்கனத்தை மேற்கொள்வது நல்லது. சுக ஸ்தானத்தில் சனி இருப்பதால் பெண்களின் சுபச்சடங்குகள், மணிவிழா, மணவிழாக்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப சம்பள உயர்வும் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உற்சாகத்தோடு செயல்பட்டு உயர்நிலை அடைய நல்ல சந்தர்ப்பங்களை வழங்கும் ஆண்டாக புது வருடம் அமையப் போகிறது.

குரு-சனி வக்ரம்!

12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. ஒருசில காரியங்கள் கைகூடுவதில் தாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது தான் நல்லது. பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகும். அவர்களை நெறிப்படுத்துவது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், பிறகு 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலத்தில் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும். உடன்பிறப்புகளால் சில தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். வாங்கிய கடனைக் கொடுக்க இயலாது. வளர்ச்சியில் வரும் குறுக்கீடுகள் அகல வழிபாடுகள் உங்களுக்கு கைகொடுக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. அதிகத் தொகை கொடுத்து வாங்கிய பொருட்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை. வைத்திருக்கும் வாகனத்தை மாற்ற முன்வருவீர்கள்.


Next Story