ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் ரிஷப ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும்.
சிம்ம - புதன் சஞ்சாரம்
ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்பர். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.
கடக - சுக்ரன் சஞ்சாரம்
ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது நல்ல காரியங்கள் பல இல்லத்தில் நடைபெறும். நீங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த முன்னேற்றம் வந்து சேரும். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டு, புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
குருவின் வக்ர இயக்கம்
ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகமாகும். எனவே அவர் வக்ரம் பெறுவது நன்மை தான். என்றாலும், லாபாதிபதியான குருவால் சில சமயங்களில் பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். வெளிநாட்டு முயற்சியில் தடை ஏற்பட்டு அகலும். தொழில் போட்டிகளை சமாளிக்க புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். ஒரு சிலருக்கு, வாங்கிய இடத்தை விற்க நேரிடலாம். வியாபாரப் போட்டி அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்காது.
குருபகவான் அஷ்டமாதிபதியாகவும் விளங்குவதால் அதன் வக்ர காலத்தில் ஒருசில நன்மைகளும் நடைபெறும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கலாம். சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குலதெய்வ வழிபாடு அவசியம்.
ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்
ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசியான உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். சப்தம- விரயாதிபதியான செவ்வாய் உங்கள் ராசியில் வரும்போது, வாழ்க்கைத் துணை வழியே செலவுகளை ஏற்படுத்தலாம். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். 'சேமிப்பு கரைகிறதே' என்று கவலைப்படுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள இயலாது.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் விஷ்ணுவை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 18, 19, 20, 26, 27, 31, ஆகஸ்டு: 1, 11, 12, 15, 16மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் குருவின் வக்ரத்தால் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். சுபச்செலவு அதிக ரிக்கும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் அன்பு கூடும். உதிரி வருமானங்களும் வரலாம். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகளும் வந்துசேரும். குரு பகவான் வழிபாடு குதூகலம் வழங்கும்.