ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்


ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 6:46 PM GMT)

கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை

தன்னம்பிக்கையோடு செயல்பட்டு முன்னேற்றம் காணும் ரிஷப ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், புதனோடும் சூரியனோடும் இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 'புத சுக்ர யோகம்', 'புத ஆதித்ய யோகம்' செயல்படும் இந்த மாதத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

சனி மற்றும் குருவின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி, இப்போது வக்ர நிவர்த்தியாகி பலம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. அதே சமயம் கார்த்திகை 12-ந் தேதி வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகிறது. இதனால் மாதத்தின் முற்பகுதியில் பிரச்சினைகள் அதிகரிக்கத்தான் செய்யும். அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. சில காரியங்களை செய்து விட்டு, 'ஏன் செய்தோம்?' என்று நினைப்பீர்கள். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், உங்கள் ராசிக்கு சனி யோகம் செய்யும் கிரகம் என்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

அஷ்டம, லாபாதிபதியாக விளங்கும் குரு பகவான், வக்ர நிவர்த்தியாகி லாப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகமாக இருந்தாலும் லாபாதிபதியாக இருப்பதால் பொருளாதார பற்றாக்குறை அகலும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வழிபிறக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள். கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

தனுசு - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், கார்த்திகை மாதம் 12-ந் தேதி தனுசு ராசிக்குச் செல்கிறார். தன ஸ்தானாதிபதி 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மக்கள் செல்வங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட வழிவகுத்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்கும் சூழ்நிலை உருவாகலாம். அதன்மூலம் வந்த தொகையைக் கொண்டு, கடன் சுமையின் ஒரு பகுதியை குறைப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒருசில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறலாம். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளைக் கொடுப்பர்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

கார்த்திகை 13-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் வக்ர இயக்கத்தில் வருகிறார். சப்தம, விரயாதிபதியான செவ்வாய், உங்கள் ராசிக்கு வரும்பொழுது குடும்பச்சுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை, பணியில் இருப்பவராக இருந்தால் ஊர் மாற்றம் ஏற்படலாம். பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் பாகப்பிரிவினைக்கு ஒத்துழைக்க மறுப்பர். 'குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதில் தாமதம் ஏற்படுகிறதே' என்று கவலைப்படுவீர்கள். இருப்பினும் செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருப்பதால், முடிவடையாத காரியங்கள் முடிவடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம்.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

கார்த்திகை 21-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும் 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், 8-ம் இடத்திற்கு வரும்பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தடைபட்டு நின்ற தொழில் வெற்றிநடைபோடும். தெய்வங்களை வழிபட்டதற்கான பலனைப் பெறுவீர்கள். கொடுக்கல் - வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

இம்மாதம் பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரர் வழிபாடு பெருமையை சேர்க்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-நவம்பர்: 17, 18, 29, 30, டிசம்பர்: 3, 4, 9, 10, 14, 15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் உங்கள் ராசிநாதன் சுக்ரன், புதனோடும், சூரியனோடும் இணைந்து சஞ்சரிப்பதால், மாதத் தொடக்கத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கணவன் - மனைவி உறவு பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். செவ்வாய் - சனி பார்வை இருப்பதால் உடன்பிறப்புகளின் உறவு திருப்தி தராது. பணிபுரியும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.


Next Story