கன்னி - தமிழ் மாத ஜோதிடம்


கன்னி - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 6:46 PM GMT)

கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை

சிறப்பான வாழ்வு அமைய சிந்தித்துச் செயல்படும்் கன்னி ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சுக ஸ்தானத்தில் சூரியன் மற்றும் சுக்ரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 'புத சுக்ர யோகம்', 'புத ஆதித்ய யோகம்' ஆகியவற்றோடு மாதப் பிறப்பு அமைவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். தொழில் மேன்மையும், பொருளாதாரத்தில் நிறைவும் உண்டு.

சனி மற்றும் குருவின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி, வக்ர நிவர்த்தியாகிப் பலம்பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். அவர்களின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் ஒவ்வொன்றாக வெற்றிபெறும். திருமணம் போன்றவற்றில் இருந்த தடைகள் நீங்கும். தன்னிச்சையாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம்.

உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குரு, வக்ர நிவர்த்தியாகி பலம்பெற்றுவிட்டார். அவரது நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கல்யாண முயற்சிகள் கை கூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் ஈடுபட்டு சுப விரயங்களைச் செய்ய முன்வருவீர்கள். பொதுவாக ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

தனுசு - புதன் சஞ்சாரம்

கார்த்திகை 12-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் புதன், 4-ம் இடத்திற்கு வரும்பொழுது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க மாற்றினத்தவர்கள் ஆதரவு தருவர். உத்தியோகத்தில், சகப் பணியாளர்களின் மூலமாக சில தொல்லைகளைச் சந்திப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு கூடுதல் பொறுப்பைக் கொடுத்து வேலைப்பளுவை அதிகரிக்கச் செய்வர்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

கார்த்திகை 13-ந் தேதி ரிஷப ராசிக்குச் செவ்வாய் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் போது உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உயர்மட்ட அதிகாரிகளின் அனுகூலம் உண்டு. முடங்கிக் கிடந்த சொத்து விற்பனை இப்பொழுது துரிதமாக இயங்கி லாபத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை, மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

தனுசு - சுக்ரன் சஞ்சாரம்

கார்த்திகை 21-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சுக ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெற்றோர் வழி உறவில் இருந்த விரிசல் அகலும். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் உங்கள் செயல்பாட்டைக் கண்டு பாராட்டுவர். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வரலாம்.

இம்மாதம் புதன்கிழமை தோறும் அனுமனை வழிபடுவதன் மூலம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 21, 22, 26, 27, டிசம்பர்: 7, 8, 11, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் பலம்பெற்ற குருவின் பார்வை பதிவதால் வளர்ச்சி கூடும். வருமானம் திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதித் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டு. சகப் பணியாளர்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகளால் வேலைப் பளு அதிகரிக்கும்.


Next Story