கன்னி - தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை
நிதானமே நிம்மதியை வழங்கும் என்று சொல்லும் கன்னி ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும் என்பார்கள். அதே நேரத்தில் குருவினுடைய பார்வையும் தன ஸ்தானத்தில் பதிகின்றது. எனவே பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நிறைவேறாத ஒரு சில காரியங்கள் நிறைவேறி நிம்மதியை வழங்கும். இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி உயர்வின் காரணமாகவும், ஊதிய உயர்வின் காரணமாகவும், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று பணிபுரிய நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ராகு-கேது சஞ்சாரம்
பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகு-கேதுக்கள், உங்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டும். மாதத் தொடக்கத்தில் 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து லாபத்தை வரவழைத்துக் கொடுப்பர். பயணங்கள் அதிகரிக்கும். பாசமும், நேசமும் கொண்டவர்களால் வளர்ச்சி கூடும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும். 2-ல் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம். எனவே வாக்கு கொடுக்கும் முன் யோசிப்பது நல்லது. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
கடக - சுக்ரன்
வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு நீச்சம்பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது நற்பலன்கள் நடைபெறும். குறிப்பாக வருமானம் உயரும். வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் உறுதுணைபுரிவர். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு பல நல்ல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு.
ரிஷப - புதன்
வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.தோள்கொடுத்து உதவ நண்பர்கள் காத்திருப்பர். தனவரவு தாராளமாகும். இனத்தார் பகை மாறும். எதையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மனதளவில் நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் யோகம் வாய்க்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு அகலும். சேமிப்பு உயர்ந்து உள்ளத்தை மகிழ்விக்கும்.
பொதுவாழ்வில் இருந்த வீண் பிரச்சினைகள் அகலும். விருப்பங்கள் நிறைவேறும். தொழிலில் உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். பெண்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கணவன் - மனைவி, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 20, 21, 24, 25, 26, ஜூன்: 2, 3, 5, 6.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.