கன்னி - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்


கன்னி  - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:46 PM GMT)

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை

அமைதியாக இருந்து கொண்டு அரிய பணிபுரியும் கன்னி ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியிலேயே விரயாதிபதி சூரியன் மற்றும் செவ்வாயும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே வரவும், செலவும் சமமாகவே இருக்கும். எந்தச் செயலைத் தொடங்க நினைத்தாலும் அதற்குரிய பொருளாதாரம் கடைசி நேரத்தில் வந்து கைகூடிவிடும். 2-ல் கேது இருப்பதால் புது முயற்சிகளில் ஈடுபடும்பொழுது அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செய்வது நல்லது.

புதன் வக்ரம்

புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அதே நேரத்தில் அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியிலேயே வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம், இதுபோன்ற வக்ர காலங்களில்தான் யோகம் செய்யும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து பொருளாதார நிலை உயரும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். புகழ்மிக்கவர்கள் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுக்கலாம்.

துலாம் - செவ்வாய்

புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 2-ம் இடத்தில் சஞ்சரித்து, தன் வீட்டைத் தானே பார்ப்பதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பூமி யோகம் உண்டு. 'வாங்கிய இடத்தை விற்க முடியவில்லையே, வில்லங்கம் இருக்கின்றதே' என்றெல்லாம் நினைத்தவர்களுக்கு இப்பொழுது புதிய திருப்பங்கள் ஏற்படும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவோடு கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதர ஒத்துழைப்போடு நற்பலன்களைக் காணும் நேரம் இது.

துலாம் - புதன்

புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிநாதன் 2-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாதிருந்த மங்கல நிகழ்ச்சிகள் இப்பொழுது நடைபெறும். இல்லம் கட்டிக் குடியேறுவதோ அல்லது வீடு வாங்கிக் குடியேறுவதோ உங்கள் எண்ணங்களைப் பொறுத்து அமையும். மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். சம்பள உயர்வு பற்றிக் கேட்டு சலிப்படைந்த உங்களுக்கு இப்பொழுது தானாக சம்பள உயர்வும், பதவி உயர்வும் வரலாம்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு திருப்தி தரும். கலைஞர்களுக்கு விட்டுப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம். மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 23, 24, அக்டோபர்: 4, 5, 8, 9, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.


Next Story