பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்; சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு இதற்காக 103-வது அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுடன் அச்சட்டம் அமலில் உள்ளது. இதற்கிடையே இந்த அரசியல் சட்ட திருத்தம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி, 'ஜன்ஹிட் அபியான்', 'யூத் பார் ஈக்குவாலிட்டி' ஆகிய அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.தி.மு.க. சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை விசாரிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, எஸ்.ரவீந்திர பட், பேலா திரிவேதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.அந்த அமர்வு முன்பு மனுதாரர்கள் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 7 நாட்கள் பரபரப்பான விவாதம் நடந்தது.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது சரிதானா? சுயநிதி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிப்பது சரிதானா? எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்களை இந்த இடஒதுக்கீட்டில் இருந்து விடுவித்தது சரிதானா? இவையெல்லாம் அரசியல் சட்டத்தின் அடிப்படை தன்மையை மீறுகிறதா? என்ற கோணத்தில் அரசியல் சட்ட அமர்வு விசாரணை நடத்தியது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்தே முன் வைத்த வாதங்கள் வருமாறு:-பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என 9 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு இந்திரா சாஹ்னி வழக்கில் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிப்படையை மீறுகிறது.இவ்வாறு அவர் வாதிட்டார்.
தி.மு.க.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் முன்வைத்த முக்கிய வாதங்கள் வருமாறு:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது சட்ட திருத்தம் அரசியல் சட்டத்தை மீறியதாகும். இச்சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்கக்கூடிய வகையிலும் இல்லை.சமூக பின்தங்கிய நிலையை வரையறுக்க பொருளாதார அம்சத்தை கருத்தில் கொள்ள முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஜனாதிபதியே கோவிலுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்கும் சட்டம் இருந்தாலும் சமூகத்தில் தீண்டாமை நிலவுகிறது.இவ்வாறு அவர் வாதிட்டார்.
மத்திய அரசு
மத்திய அரசன் சார்பில் அப்போதைய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ''பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அசாதாரண சூழலில் இயற்றப்பட்ட அத்தியாவசியமானதாக கருத வேண்டும். இந்த சட்டம் அரசியல் சட்டத்தை மீறவில்லை. இந்த சட்டம் 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு இல்லாமல் கொண்டுவரப்பட்டுள்ளது'' என்று கூறினார்.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி தள்ளிவைத்தனர்.
இடஒதுக்கீடு செல்லும்
இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு அளித்தது. 40 மனுக்கள் மீது 4 தனித்தனி தீர்ப்புகளை வெளியிட்டது.தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு அளித்தனர். மற்ற 3 நீதிபதிகளும் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்தனர். எனவே, பெரும்பான்மை அடிப்படையில், இடஒதுக்கீடு செல்லும் என்று அரசியல் சட்ட அமர்வு உறுதி செய்தது.
நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில் கூறியதாவது:-
அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையை உறுதி செய்யும் கருவியாக அரசுக்கு இடஒதுக்கீடு உள்ளது. நலிந்த நிலையில் உள்ள எந்த வகுப்பையும் சேர்த்துக்கொள்ள அது ஒரு வழிமுறை.பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் சமத்துவ சமுதாயத்தை மீறவில்லை. அரசியல் சட்டத்தின் அடிப்படை தன்மையை மீறவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மறுஆய்வு செய்ய வேண்டும்
நீதிபதி பேலா எம்.திரிவேதி தனது தீர்ப்பில் கூறியதாவது:-
10 சதவீத இடஒதுக்கீடு பாரபட்சமானது என கூற முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு தனி ஒதுக்கீடு அளிக்க நாடாளுமன்றம் எடுத்த உறுதியான நடவடிக்கையாக அதை பார்க்க வேண்டும். அம்மக்களின் தேவையை நாடாளுமன்றம் உணர்ந்துள்ளது. அவர்களை தனிப்பிரிவாக வகைப்படுத்தியது அர்த்தமுள்ளது. சமமற்றவர்களை சமமாக கருத முடியாது.பழங்கால சாதி முறைதான் இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தது என்பதையோ, அதனால்தான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் சமவாய்ப்பு பெற்றனர் என்பதையோ ஏற்க முடியாது. நாடு விடுதலை அடைந்து 75-ம் ஆண்டுகள் ஆன நிலையில், சமூகத்தின் பெரும் நலனை கருதி இடஒதுக்கீடு முறையை மறுஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.