ஆசிய விளையாட்டு போட்டிகள்: மகளிர் கிரிக்கெட்டில் வங்காளதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி


ஆசிய விளையாட்டு போட்டிகள்:  மகளிர் கிரிக்கெட்டில் வங்காளதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி
x
தினத்தந்தி 24 Sep 2023 3:08 AM GMT (Updated: 24 Sep 2023 3:32 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் கிரிக்கெட்டில் வங்காளதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஹாங்சவ்,

ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் சீனாவின் ஹாங்சவ் நகரில் நடந்து வருகிறது. இதில், அரையிறுதியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது.

இதன்படி, அதன் தொடக்க ஆட்டக்காரர்களான ஷாதி ராணி மற்றும் ஷமீமா சுல்தானா இருவரும் விளையாடினர். தொடக்க பந்திலேயே இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இந்த போட்டியில், கேப்டன் நிகர் சுல்தானா அதிக அளவாக 12 ரன்கள் எடுத்துள்ளார். மற்ற வீராங்கனைகளில் சோபனா (8), ரித்து மோனி (8), ரபியா கான் (3), கட்டூன் (3) ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நஹிடா அக்தர் (9) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

17.5 ஓவர்களில் மொத்தம் 51 ரன்கள் எடுத்த நிலையில், வங்காளதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து, 20 ஓவர்களில் 52 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய மகளிர் அணி விளையாடியது.

இந்திய அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். எனினும், அடுத்தடுத்து இந்தியா அதிரடியாக விளையாடியது.

இந்திய அணியின் ஷெபாலி வர்மா (17 ரன்கள் 12 பந்துகள், 2 பவுண்டரிகள்) எடுத்து அணியை வெற்றியை நோக்கி முன்னேற்றினார். எனினும், அவர் ஆட்டமிழந்ததும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடினார்.

அவர் 20 ரன்களுடனும், கனிகா அகுஜா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணி 8.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்து உள்ளது. வங்காளதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


Next Story