அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
x
தினத்தந்தி 20 Nov 2023 8:50 AM GMT (Updated: 20 Nov 2023 9:54 AM GMT)

இந்த கோரிக்கையை மாநில அமைச்சரவை, கவர்னருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைத்திருந்தது.

சென்னை,

முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை கோரியிருந்தது.

இந்த கோரிக்கையை மாநில அமைச்சரவை, கவர்னருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைத்திருந்தது. இந்த கோரிக்கை மீது எந்த பதிலும் கிடைக்காததால் இந்த வழக்கில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். கவர்னர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 13-ம் தேதி ஒப்புதல் வழங்கியதாக, சுப்ரீம் கோர்ட்டில் கவர்னர் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கை மூலம் விவரம் வெளியாகி உள்ளது.


Next Story