மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி திடீர் விலகல்


மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி திடீர் விலகல்
x
தினத்தந்தி 30 May 2023 11:28 AM IST (Updated: 30 May 2023 11:58 AM IST)
t-max-icont-min-icon

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

திருப்பூர்,

வைகோவுக்கு கடிதம் எழுதிய அவர், மதிமுக தொடங்கியபோது வாரிசு அரசியலுக்கு எதிரான வைகோவின் உணர்ச்சி பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தார்கள். ஆனால் அண்மை காலமாக அவரின் குழப்பமான செயல்பாடுகள் காரணத்தினால் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டார்கள் . கட்சியில் மகனை அரவணைப்பதும் தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது.

வைகோ இதை உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க அவரின் பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்றால், மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என்று தெரிவித்திருந்தார்.

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் முடிவை மறுத்த வைகோ, திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை அலட்சியப்படுத்துவதாக கூறினார். மதிமுக தொண்டர்கள் எண்ணம் அதுவல்ல என்பதை தெளிவுபடுத்தினார். இதைத் தொடர்ந்து திருப்பூர் துரைசாமியை கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி வைகோவை கட்சியினர் வலியுறுத்த தொடங்கினர். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி வைகோவுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். இதனால் திருப்பூர் துரைசாமியை மதிமுகவிலிருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

இந்நிலையில் கடந்த மாதம் திருப்பூர் துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து பொது வாழ்க்கையில் இருந்து தான் வழங்குவதாக அறிவித்தார். தனது வீட்டில் போட்டி பொதுக்குழு எதுவும் நடத்தவில்லை என்றும் திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளிலும் தான் சேரப் போவதில்லை என்றும் கூறியுள்ள அவர் பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க போவதாக அறிவித்தார். மதிமுகவில் நீடிப்பதாகவே கூறி வந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் துரைசாமி, மதிமுகவின் அடிப்படை உறுப்பினர், அவைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ம.தி.மு.கவிற்குள் நடக்கும் பல்வேறு மாற்றங்களைக் குறிப்பிட்டு, கட்சியை தி.மு.கவோடு இணைத்து விடலாம் என ஆவேச கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் அக்கட்சியின் அவை தலைவரான துரைசாமி.

மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என அண்மையில் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி திடீர் விலகி உள்ளார். கட்சியில் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.

. இது குறித்து அவர் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ம.தி.மு.க. துவங்கப்பட்ட காலத்தில் இருந்து உங்கள் குடும்பத்தை சார்ந்த யாரும் கட்சி பதவிக்கு வர மாட்டார்கள் என்று தொடர்ந்து பேசி வந்தீர்கள். அதை தலைமைக்கழக நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் முழுவதுமாக நம்பினார்கள்.

பிற்காலத்தில் உங்களின் தவறான அரசியல் நிலைப்பாடு காரணமாக தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி தி.மு.க.வில் இணைந்து விட்டனர். ம.தி.மு.க. துவங்கப்பட்ட காலத்திலிருந்து சட்ட மன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி மன்ற தேர்தல்களின் போது தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி என தனித்தனியாக நிதி திரட்டியுள்ளோம்.

ஆனால் நீங்கள் ஒருமுறை உயர்நிலைக்குழு கூட்டத்திலோ, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலோ, பொதுக்குழு கூட்டத்திலோ வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றதில்லை.

பரந்த ஜனநாயகம் பேசிய நீங்கள், கட்சிக்கென்று பொருளாளர் இருந்தும், அவர் கையொப்பமின்றி நீங்களாகவே 17 ஆண்டுகளுக்கு மேலாக காசோலைகளில் தன்னிச்சையாக கையொப்பமிட்டு வங்கியில் பணம் எடுத்து வருகிறீர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இது போன்ற தவறு நடக்கவில்லை.

பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்று நீங்கள் முழங்கிவிட்டு அவற்றை மனசாட்சியின்றி காற்றில் பறக்கவிட்டு இப்படி சுயநலமாக நீங்கள் இருப்பீர்கள் என்று கழக தோழர்கள் யாரும் நினைக்கவில்லை.

பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்து அரசியல் செய்துவந்த என்னால் இனியும் உங்களுடன் பயணிக்க முடியாது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிர் நீத்த உண்மை தொண்டர்களுக்காக கட்சியை உங்கள் காலத்திலேயே தி.மு.க.வுடன் இணைத்துவிடுவது நல்லது.

கடந்த 30 ஆண்டுகளாக ஏமாற்றியதை போல், இனியும் ஏமாற்ற வேண்டாம் என உங்களிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டு இன்று முதல் ம.தி.மு.க.வின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட எல்லா பொறுப்புகளிலும் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.


Next Story