ரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் ஒருபோதும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்- தங்கம் தென்னரசு


ரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் ஒருபோதும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்- தங்கம் தென்னரசு
Daily Thanthi 2025-03-14 04:51:57.0
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம்', மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.

நெருக்கடியான இந்தச் சூழலிலும், இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியினை இழந்தாலும் கொள்கையினை விட்டுத்தர மாட்டோம். இருமொழிக் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, தமிழ்நாட்டின் தன்மானம் காத்த முதலமைச்சர் அவர்களின் பின் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அணிவகுத்துள்ளனர். எத்தனை தடைகள் எதிர்வரினும் மன உறுதியோடு நம்மை வழிநடத்தும் முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாய் திரண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு பாவேந்தர் பாரதிதாசனின் வைர வரிகளை நினைவு கூற விழைகிறேன்.

தமிழர்க்குத் தொண்டு செய்யும்

தமிழனுக்குத் தடை செய்யும்

நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்."

1 More update

Next Story