ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலத்தை... ... ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
x
Daily Thanthi 2025-04-06 07:34:17.0
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேசுவரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் ரெயில் பாலம் கட்டப்பட்டது.

இந்தியாவில் கடல் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ரெயில்வே பாலம் என்ற சிறப்பை பெற்ற பாம்பன் பாலம் நூற்றாண்டுகளை கடந்த நிலையில், தன்னுடைய உறுதித்தன்மையை படிப்படியாக இழக்கத் தொடங்கியது.

இந்த சூழலில், ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து, ரெயில்கள் இயக்கிப் பார்த்து சோதனை மேற்கொள்ளப்பட்டு தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார். அவரது வருகையையொட்டி, ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திரமோடி மண்டபம் வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பாம்பன் பாலத்தில் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள மேடைக்கு வந்தார். அப்போது அவர் தமிழக பாராம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.

பின்னர் மேடையில் இருந்து புதிய ரெயில் பாலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனைத் தொடர்ந்து, பாம்பனில் இருந்து ராமேசுவரத்துக்கு ரெயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தில் சென்றது.

தொடர்ந்து, தூக்குப்பாலம் மேல்நோக்கி உயர்ந்து செல்ல கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் ரெயில் பாலத்தை கடந்து செல்ல இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையின் கண்காணிப்பு டிரோன்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

1 More update

Next Story