
வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க, இந்திய தேசிய கீதங்கள் முழங்க உற்சாக வரவேற்பு
வாஷிங்டன்,
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
அதை முடித்துக் கொண்டு, தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றார். வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனும், அவருடைய மனைவி ஜில் பைடனும் மோடிக்கு சிறப்பு விருந்து அளித்தனர்.
ஜில் பைடன் ஏற்பாட்டில் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்றார்.
21 குண்டுகள் முழங்க வரவேற்பு
பின்னர், ஜோ பைடனுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஜோ பைடன் பாரம்பரிய வரவேற்பு அளித்தார். 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், அவருடைய கணவர் டாக் எம்ஹாப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மோடி நம்பிக்கை
வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-
ஜனாதிபதி ஜோ பைடன், ஜில் பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம். அமெரிக்காவில் உள்ள 40 லட்சம் இந்தியர்களுக்கும் பெருமை.
ஜனநாயக மாண்புகள் அடிப்படையில், அமெரிக்காவும், இந்தியாவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. பன்முகத்தன்மையில் பெருமை கொள்கின்றன.
இந்தியர்களுக்கு கதவு திறப்பு
30 ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண மனிதனாக அமெரிக்கா வந்தேன். அப்போது, வெள்ளை மாளிகையை வெளியில் இருந்து பார்த்தேன். பிரதமரான பிறகு, பல தடவை வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளேன். முதல் முறையாக, இவ்வளவு அதிகமான இந்தியர்களுக்கு வெள்ளை மாளிகை கதவு திறக்கப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிப்பேன். இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமையும் என்று நம்புகிறேன். உலக நன்மைக்காகவும், அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமைக்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளோம் என்று அவர் பேசினார்.
ஜோ பைடன்
ஜோ பைடன் பேசியதாவது:-
அமெரிக்க-இந்திய உறவு, 21-ம் நூற்றாண்டில் மிகவும் சிறப்பான உறவுகளில் ஒன்று. இன்று இருநாடுகளும் எடுக்கும் முடிவு, இனிவரும் தலைமுறைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
ரஷிய போர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண இருநாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என்று அவர் பேசினார்.
இந்தியர்கள் கோஷம்
வரவேற்பு நிகழ்ச்சியின்போது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல், வெள்ளை மாளிகையின் தெற்குப்புற புல்வெளியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். இந்நிகழ்ச்சிக்காக, சுமார் 8 ஆயிரம் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து இந்தியர்கள் ஆர்வமாக வந்திருந்தனர். சிலர் தனிவிமானம் ஏற்பாடு செய்து வந்தனர். இருநாட்டு தேசிய கொடிகளையும் கையில் பிடித்தபடி கோஷங்களை எழுப்பினர்.
‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா கி ஜே’, ‘மோடி மோடி’ என்ற முழக்கங்களை எழுப்பினர். ‘‘என்ன ஒரு காட்சி. திருவிழா போல் இருக்கிறது’’ என்று பாஸ்டனில் இருந்து வந்திருந்த ஹிதேஷ் ஷா என்ற இந்தியர் கூறினார்.






