
நேட்டோ என்னும் பாதுகாப்பு கூட்டணியில் உக்ரைன் சேர்ந்து, பாதுகாப்பு தேடிக்கொள்வதற்கு எதிராக ரஷியா போர்க்கொடி உயர்த்தியது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் ராணுவ கட்டமைப்புகளின் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியது.
தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் மரியுபோல் போன்ற சில நகரங்களை, கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. உக்ரைன் போர் இன்று 100-வது நாளை எட்டுகிற நிலையில் தற்போது அதன் கவனம், கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 பகுதிகளும் அடங்கிய டான்பாஸ் மீது திரும்பி உள்ளது.
இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த 18 ஆயிரத்து 800 பேர் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களில் 2,663 பேர் குழந்தைகள் ஆவார்கள்.
உக்ரைன் போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 15 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர். 2.5 லட்சம் குழந்தைகள் ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
2 லட்சம் குழந்தைகள் வலுக்கட்டாயமாக ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இந்தப் போரில் இதுவரை 243 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 446 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.






