
முதன்முறையாக காஸ்பியன் கடலில் ரஷிய எண்ணெய் களம் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், கருங்கடலில் ரஷியாவின் 2 கப்பல்களை கடந்த சில வாரங்களுக்கு முன், நீருக்கடியில் இருந்து ஆளில்லா விமானம் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மிரட்டல் விடும் வகையில் பேசினார். உக்ரைனை கடலில் இருந்தே துண்டித்து விடுவதே, இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான வழியாக இருக்கும் என புதின் அப்போது கூறினார்.
அவர் தொடர்ந்து, பொதுவான கடல் பகுதி கூட இல்லாமல், மற்றொரு நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தாக்குதல் நடந்திருப்பது என்பது திருட்டுத்தனம் ஆகும். உக்ரைனின் இந்த திருட்டுத்தனத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் கப்பல்களுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரஷியா பரிசீலனை மேற்கொள்ளும் என குறிப்பிட்டார். உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷியா தாக்குதலை விரிவுப்படுத்தும். இந்த துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் புதின் கூறினார்.
இந்த தாக்குதல்களில் அந்த இரு கப்பல்களும் கடுமையாக சேதமடைந்து உள்ளன. செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தி விட்டன என உக்ரைன் வட்டாரங்கள் தெரிவித்தன. இது, ரஷிய எண்ணெய் போக்குவரத்துக்கு ஒரு பெரிய பாதிப்பை உண்டு பண்ணியிருக்கும் என்றும் உக்ரைன் அப்போது தெரிவித்து இருந்தது.






