நாளை திரையரங்குகளில் வெளியாகும் 10 திரைப்படங்கள் (31-10-2025)

அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
சென்னை,
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்
இந்நிலையில் அக்டோபர் 31ம் 10 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி, ஆர்யன், ஆண் பாவம் பொல்லாதது, தடை அதை உடை, தேசிய தலைவர், ராம் அப்துல்லா ஆண்டனி, ‘காந்தாரா சாப்டர்-1 ’ஆங்கில வெர்ஷன், மெஸன்ஜர், பரிசு, பாகுபலி தி எபிக், அட்டகாசம் ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளன.
1. ஆர்யன்
விஷ்ணு விஷால் பிரவின் இயக்கத்தில் ‘ஆர்யன்’ படத்தில் நடித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி, சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலதி பார்வதி, அவினாஷ், அபிஷேக், ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2. ஆண்பாவம் பொல்லாதது
"ஜோ" பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' படம் நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.
3. தடை அதை உடை
காந்திமதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ள படம் ‘தடை அதை உடை’. இந்த படத்தில் அங்காடித்தெரு படத்தின் மூலம் நடிகரான மகேஷ். குணா பாபு, பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கவுதமி, சுபா, சூரியப்ரதாபன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
4. தேசிய தலைவர்
சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘தேசிய தலைவர்’. எஸ்.எஸ்.ஆர்.சத்யா தயாரிப்பில், அரவிந்த்ராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். ஜெ.எம் பஷீர் முத்துராமலிங்க தேவராக நடித்துள்ளார். இப்படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.
5. ராம் அப்துல்லா ஆண்டனி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் பூவையார். இவர் தற்போது இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராம் அப்துல்லா ஆண்டனி' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அன்னை வேளாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அஜய் அர்னால்ட்அர்ஜுன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா என பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். இப்படம் தவறான பாதையில் செல்லும் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாளை முதல் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
6.‘காந்தாரா சாப்டர்-1 ’ஆங்கில வெர்ஷன்
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்!' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் நாளை முதல் வெளியாக உள்ளது.
7. மெஸன்ஜர்
ரமேஷ் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ள படம் 'மெஸன்ஜர்'. காதல் தோல்வியில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கும் கதாநாயகனை ஒரு முகநூல் செய்தி தடுக்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
8. பரிசு
சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும் தடைகளையும் புறக்கணிப்புகளையும் நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை தான் 'பரிசு'. சின்னச் சின்ன சலனங்களுக்கும் பருவக்கவர்ச்சிகளுக்கும் இடம் தராமல் லட்சியத்தை நோக்கிச் சென்று அடையும் ஒரு பெண்ணின் கதை. இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.
9 பாகுபலி தி எபிக்
பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘பாகுபாலி’ படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக ‘பாகுபலி தி எபிக்’ என்ற பெயரில் நாளை முதல் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
10. அட்டகாசம்
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அட்டகாசம்'. இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்தை நாளை முதல் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.






