கூகுளுடன் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்

ஏ. ஆர். ரகுமான் கூகுள் கிளவுட் உடன் இணைந்து ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் இசைக் குழுவை அமைக்கவிருக்கிறார்.
கூகுளுடன் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்
Published on

இந்திய திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.

குறிப்பாக 2009-ம் ஆண்டு 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான், இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக உருவெடுத்தார். மேலும் 'மில்லியன் டாலர் ஆர்ம்', 'கப்பில்ஸ் ரிட்ரீட்', '127 ஹவர்ஸ்' உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் மற்றும் சர்வதேச திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சினிமாவில் சுமார் 33 ஆண்டுகளாக இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான், இன்றைய தலைமுறையினரும் கொண்டாடும் வகையில் பாடல்களை கொடுத்து வருகிறார். அதே சமயம் ஆடுஜீவிதம், மைதான் உள்ளிட்ட படங்களில் உலகத் தரம் வாய்ந்த இசையை வழங்கி, சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் கூகுள் கிளவுட் உடன் இணைந்து ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் இசைக் குழுவை அமைக்கவிருக்கிறார். இந்தத் திட்டத்துக்கு சீக்ரெட் மவுண்டேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கான பொழுதுபோக்கு நிறைந்த கதைச் சொல்லும் பாணியிலான இசை ஆல்பத்தை உருவாக்குவதில் இந்தக் குழு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் கிளவுட் வழங்கும் ஏஐ தொழில்நுட்பமான வியோ 3, இமேஜென், ஜெமினி ப்ளாஷ் 2.5, ஜெமினி 2.5 புரோ ஆகியவற்றை இந்தத் திட்டத்தில் பயன்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர். இசைக் கலைஞர்களும் ஏஐ தொழில்நுட்பமும் ஒருங்கே இணைந்து பணியாற்றும்போது பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com