நடிகர் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. துளு நாடு மக்கள் ஆவேசம்

‘தெய்வா’ கடவுளை அவமதித்த நடிகர் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துளு நாடு மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நடிகர் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. துளு நாடு மக்கள் ஆவேசம்
Published on

பெங்களூரு,

கன்னட திரைஉலகில் பிரபல நடிகரான ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான காந்தாரா' மற்றும் 'காந்தாரா சாப்டர்-1' ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. கன்னடம் மட்டுமல்லாமல் பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்களின் தெய்வமாக விளங்கும் 'தெய்வா' என்ற சாமியை அடிப்படையாக கொண்டே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ரிஷப் ஷெட்டி, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மேடையில் தோன்றி பேசிய நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா திரைப்படத்தில் வரும் தெய்வா' கடவுளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. அவர் பேசுகையில் 'தெய்வா' சாமி ஒரு பெண் தெய்வம் என்று விமர்சித்து பேசியதாகவும், அந்த கடவுளை கிண்டலடிப்பதுபோல் முக பாவனைகளை செய்து காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுகள் நடிகர் ரிஷப் ஷெட்டி முன்பு தான் நடந்துள்ளது. ஆனால் அவர் அதற்கு கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரன்வீர் சிங் தங்கள் தெய்வத்தை அவமதித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதுபோல் அவரை கண்டிக்காத நடிகர் ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் துளு மொழி பேசும் மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதற்கு துளுநாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா கமலாக்ஷா கந்தகாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், நடிகர் ரன்வீர் சிங்கின் இந்த செயல் எங்கள் கடவுள் தெய்வாவை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது செயலால் எங்கள் மனது புண்பட்டுள்ளது.

இதற்கு நடிகர் ரன்வீர் சிங், கத்ரி மஞ்சுநாதா கோவிலுக்கு வந்து தெய்வா சாமி சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல் ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ஆக்ரோஷமாக கூறினார். இது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com