ரசிகர்களை நோக்கி ஆபாச சைகை காட்டிய நடிகர் ஷாருக்கானின் மகன்.. வீடியோ வெளியாகி பரபரப்பு

கேளிக்கை விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆர்யன் கான் ரசிகர்களை பார்த்து ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிரிகேட் ரோட்டில் புதிதாக கேளிக்கை விடுதி (பப்) தொடங்கப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா கடந்த மாதம் (நவம்பர்) 28-ந் தேதி நடைபெற்றது. இதில், பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கான் பங்கேற்றார். அவரை பார்க்க பிரிகேட் ரோட்டில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களில் இளம்பெண்களும் அடங்கும். இந்த நிலையில், பப் முன்பாக திரண்டு இருந்த தனது ரசிகர்களை பார்த்து ஆர்யன் கான் கைகளை அசைத்தார். அப்போது தனது ரசிகர்களை பார்த்து ஆர்யன் கான் ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது.
அந்த சந்தர்ப்பத்தில் ஆர்யன் கான் அருகே மந்திரி ஜமீர் அகமதுகான், அவரது மகன், ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகன் ஆகியோர் நின்றிருந்தனர். அவர்களும், ஆர்யன் கான் ஆபாச சைகை காண்பிப்பதை பார்த்து அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்யன் கான் ஆபாச சைகை காண்பிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் என்பதாலும், அவருடன் ஆளுங்கட்சியின் மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் மகன்கள் இருந்த காரணத்தால் இந்த விவகாரத்தை போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.






