தனது படத்தை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது- நடிகை ஷில்பா ஷெட்டி ஐகோர்ட்டில் மனு

அந்த மனுவில் விதிமீறலில் ஈடுபட்ட ஆன்லைன் இணையதளங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மும்பை,
இந்தியில் பிரபல நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டி, தனது பெயர், உருவம் மற்றும் பிற ஆளுமை பண்புகளை எந்தவித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். வக்கீல் ரயீஸ்கான் மூலம் தாக்கல் செய்த மனுவில் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியிருப்பதாவது;-
“எனது பெயர், உருவம், குரல் மற்றும் கையொப்பம் உள்ளிட்டவை எனது தனியுரிமை மற்றும் விளம்பர உரிமையின்றி தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தடை விதிக்க அரசின் சட்டபூர்வ தலையீடு கட்டாயமாகும். எந்த ஒரு தளத்திற்கும் ஷில்பா ஷெட்டியின் அடையாளத்தை ரகசியமாக வணிக ஆதாயத்திற்காக பயன்படுத்த உரிமை இல்லை. எனவே இதுபோன்று அனுமதியின்றி படம் பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
மேலும் அந்த மனுவில் விதிமீறலில் ஈடுபட்ட ஆன்லைன் இணையதளங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. மும்பை மற்றும் டெல்லி ஐகோர்ட்டுகள் எற்கனவே பல பிரபலங்களுக்கு இதேபோன்ற நிவாரணத்தை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






